பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்காக டெல்லி வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் வெளிநாட்டு பயணங்களுக்கு போயிங் 747-8 ரக விமானத்தை பயன்படுத்தி வருகிறார். அவரது பாதுகாப்புக்காக இந்த விமானத்தில் ஏவுகணைகள், அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. அவர் ஹாங்கி என்701 என்ற சிறப்பு காரை பயன்படுத்தி வருகிறார். சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்தக் கார் 18 அடி நீளம், 6.5 அடி அகலம் கொண்டதாகும். குண்டு துளைக்காத கண்ணாடி, பஞ்சர் ஆகாத டயர்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
ஏவுகணை, பீரங்கி, துப்பாக்கிச்சூடு தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் இந்த கார் வலுவாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 10 நாட்களுக்கு முன்பே சரக்கு விமானம் மூலம் ஹாங்கி என்701 வகையைச் சேர்ந்த இரு கார்கள் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன. அதோடு அதிநவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் விமானத்தில் வந்து சேர்ந்தன. டெல்லி சாணக்கியபுரியில் உள்ள தாஜ் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் ஜி ஜின்பிங் தங்கி உள்ளார். அந்த ஓட்டல் முழுவதும் அங்குலம், அங்குலமாக தீவிர சோதனை நடத்தப்பட்டு உள்ளது. ஓட்டலின் மேலே விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நாளை இரவு 11 மணிக்கு டெல்லியில் இருந்து அவர் பெய்ஜிங் புறப்படும் வரை, அவருக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்படும் என்று டெல்லி போலீஸ் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
> பிரிக்ஸ் மாநாட்டை ஒட்டி தலைநகர் டெல்லியில் 15,000-க்கும் மேற்பட்ட போலீஸாரும், மத்திய பாதுகாப்புப் படைகளை சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் ட்ரோன் எதிர்ப்பு கவச வாகனங்கள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன.
> வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள டெல்லி அருகே உள்ள ஹிண்டன், அம்பாலா, சிர்சா, பதின்டா விமானப் படைத் தளங்களில் ரஃபேல் போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளன. விமானப் படையின் நேத்ரா கண்காணிப்பு விமானம் டெல்லி முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.
மலேசிய பிரதமரின் கருத்து:
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி மிகவும் பிரபலமான தலைவராக இருக்கிறார். அவருக்கு வாழ்த்துகளை தெரிவிக்குமாறு பல்வேறு தரப்பினர் எனக்கு தொடர்ந்து குறுந்தகவல்களை அனுப்பி வருகின்றனர்” என்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாரத் மண்டபம்
பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறும் பாரத் மண்டபமும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலகத் தலைவர்களை வரவேற்கும் விதமாக, பாரத் மண்டபம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டுள்ளது. ‘அரங்கம் எண் 14’ பிரிக்ஸ் வர்த்தக மன்றக் கூட்டத்துக்கான அரங்கமாக உள்ளது. மாநாட்டின் முக்கியமான வர்த்தக நிகழ்வுகளில் ஒன்றான இதில், பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரும் இங்கு வர்த்தக சமூகத்தினரிடையே உரையாற்றுகின்றனர்.
‘அரங்கம் எண் 5’-ல் சர்வதேச ஊடக மையம் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 1,200 முதல் 1,400 பத்திரிகையாளர்கள் இங்கு திரண்டு மாநாடு குறித்த செய்திகளை சேகரித்து வருகின்றனர். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் வெளியாகும் முக்கிய அறிவிப்புகள், சிறப்பு நிகழ்வுகள் மற்றும் முக்கியக் காட்சிகளை உலகம் முழுவதும் கொண்டுபோய் சேர்ப்பதற்கான முக்கிய மையமாக இந்த ஊடக மையம் செயல்படும்.
ஓட்டல் கட்டணம் உயர்வு
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் என ஆயிரக்கணக்கானோர் டெல்லி வந்துள்ளனர். அவர்கள் தங்குவதற்காக டெல்லியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டல் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் டெல்லியில் உள்ள அனைத்து ஓட்டல் அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக முன்பதிவு செய்யும் இணையதளங்களில் இருந்து 5 நட்சத்திர ஓட்டல்கள் காணாமல் போய் உள்ளன. சொகுசு ஓட்டல் அறைகளுக்கான கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளது. சில ஓட்டல்களில் ஒரு இரவுக்கான கட்டணம் பல லட்சங்களாக அதிகரித்துள்ளது. லீலா பேலஸில் ஒரு அறைக்கான ஒரு நாள் கட்டணம் ரூ.6.2 லட்சம், ஐடிசி மவுரியாவில் ரூ.2.5 லட்சம், தி லோதியில் ரூ.1.2 லட்சம், லீ மெரிடியனில் ரூ.1 லட்சம் வரை உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
மூவர்... மூன்றாவது சந்திப்பு:
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அதில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி கைகோர்த்தபடி இருக்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த மூன்று தலைவர்களும் நடத்தும் 3-வது சந்திப்பு இதுவாகும்.
கவனம் ஈர்த்த புதின் விமானம்:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், அவர் பயணம் செய்யும் ‘டூம்ஸ்டே விமானம்’ கவனம் ஈர்த்துள்ளது. ரஷ்ய அதிபர் ‘இல்யூஷின் ஐஎல்-96-300பியூ’ என்கிற பிரத்யேக விமானத்தில் பயணம் செய்வது வழக்கம். இந்த விமானத்தில்தான் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் டெல்லி வந்துள்ளார். இது ‘பறக்கும் கிரெம்ளின்’ அல்லது ‘டூம்ஸ்டே விமானம்’ என்று சர்வதேச ஊடகங்களால் அழைக்கப்படுகிறது.
1980-களில் இல்யூஷின் விமான நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த விமானம், ரஷ்ய அதிபருக்கான மிகவும் பாதுகாப்பான கட்டளை மையமாகச் செயல்படுகிறது. நீண்ட தூரம் பறக்கக்கூடிய, 4 இன்ஜின்கள் கொண்ட இந்த ரஷ்ய விமானம், மிக மோசமான சூழ்நிலைகளின்போது உயர்மட்டத் தலைவர்களைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதினின் இந்திய பயணத்துக்கு ஒரே மாதிரியான இரண்டு ‘இல்யூஷின் ஐஎல்-96-300பியூ’ விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்று ஒரு போலியான விமானம் ஆகும். புதின் எந்த விமானத்தில் ஏறியுள்ளார் என்பதை யாரும் அறியாதவாறு, இரு விமானங்களும் ஒரே நேரத்தில் பறந்தன. இந்த இரட்டைப் பாதுகாப்பு உத்தி மாஸ்கோவுக்குப் புதியதல்ல. கூடுதல் பாதுகாப்புக்காக புதின் இந்த முறையில் மற்ற நாடுகளுக்குத் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.