மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா உட்பட 3 மசோதாக்கள் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய பிரதமர் மோடி. படம்: பிடிஐ

 
இந்தியா

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: முழு விவரம்

நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 298 பேர் ஆதரவு, 230 பேர் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்​களவை மற்​றும் சட்​டப்​பேர​வை​களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்​கீடு வழங்க வகை செய்​யும் மகளிர் இடஒதுக்​கீடு மசோ​தா, நாடாளு​மன்​றத்​தில் நேற்று நடந்த வாக்​கெடுப்​பில் போதிய ஆதரவு கிடைக்​காத​தால் தோல்வி அடைந்​தது.

கடந்த 2023-ம் ஆண்​டில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டது. இதன்​படி, நாடாளு​மன்​றம், சட்​டப்​பேர​வை​களில் மகளிருக்கு 33 சதவீத இடங்​கள் ஒதுக்​கப்பட வேண்​டும். மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்த மக்​களவை​யில் தற்​போதுள்ள 543 இடங்​களை 850 ஆக அதி​கரிக்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டது.

இதற்​காக, நாடாளு​மன்​றத்​தின் சிறப்​புக் கூட்​டம் நேற்று முன்​தினம் தொடங்​கியது. முதல் நாளில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டத்தை அமல்​படுத்​து​வதற்​காக அரசி​யல் சாசன திருத்​தம் (131-வது திருத்​தம்) மசோதா 2026, தொகுதி மறு​வரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்​டங்​கள் (திருத்த) மசோதா 2026 ஆகியவை மக்​களவையில் அறி​முகம் செய்​யப்​பட்​டன.

இந்த 3 மசோ​தாக்​களுக்​கும் காங்​கிரஸ், சமாஜ்​வா​தி, திமுக உள்​ளிட்ட இண்​டியா கூட்​டணி கட்​சிகள் தொடக்​கத்​தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன. மசோதா மீதான விவாதம் நள்​ளிரவு 1 மணி வரை நீடித்​தது. இந்​நிலை​யில், மக்​களவை​யில் நேற்று காலை விவாதம் தொடர்ந்​தது.

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி உள்​ளிட்​டோர் பேசினர். கனி​மொழி, ஆ.ராசா (தி​முக), சசி தரூர், ஜோதி​மணி (காங்​கிரஸ்), மிதுன் ரெட்டி (ஒய்​எஸ்​ஆர் காங்​கிரஸ்), ராஜீவ் ரஞ்​சன் சிங் (ஐஜத), கல்​யாண் பானர்ஜி (திரிண​மூல் காங்​கிரஸ்), ஸ்ரீ கிருஷ்ண தேவ​ராயலு (தெலுங்கு தேசம்), டிம்​பிள் யாதவ் (சமாஜ்​வா​தி), ஹர்​சிம்​ரத் கவுர் பாதல் (சிரோமணி அகாலி தளம்), ஹேம​மாலினி (பாஜக) உள்​ளிட்ட எம்​.பி.க்​கள் மசோ​தாவுக்கு ஆதர​வாக​வும், எதிர்ப்​பாக​வும் பல்​வேறு கருத்​துகளை முன்​வைத்​தனர். உறுப்​பினர்​களின் கேள்வி​களுக்கு மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, ராஜ்​நாத் சிங் உள்​ளிட்​டோர் பதில் அளித்​தனர்.

பிரதமர் மோடி வேண்டுகோள்: இதற்​கிடையே, மகளிர் இடஒதுக்​கீடு மசோதா மீதான வாக்​கெடுப்பை முன்​னிட்டு எம்​.பி.க்​களுக்கு பிரதமர் மோடி எக்ஸ் தளத்​தில் வேண்​டு​கோள் விடுத்​தார். ‘மகளிர் இடஒதுக்​கீடு விஷ​யத்​தில் கடந்த 40 ஆண்​டு​களாக அரசி​யல் செய்​யப்​பட்டு வந்​தது. சுதந்​திரம் பெற்று பல ஆண்​டு​கள் ஆனபிறகும், முடிவு எடுக்​கும் விஷ​யத்​தில் மகளிருக்கு குறைந்​த​பட்ச பிர​தி​நி​தித்​து​வம்​கூட தரப்​பட​வில்​லை.

இது சரி​யான நடவடிக்கை அல்ல. நாட்​டின் மக்​கள்​தொகை​யில் பாதி​யளவு இருக்​கும் மகளிர் தங்​களது உரிமை​களைப் பெறவேண்​டிய நேரம் வந்​துள்​ளது. இந்த மசோதா குறித்து பரப்​பப்​படும் தவறான தகவல்​களுக்​கு, சரி​யான பதில்​கள் அளிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

உங்​களது தாய், சகோ​தரி, மனை​வி, மகள் ஆகியோரை நினைத்​துப் பார்த்​து, மகளிர் இடஒதுக்​கீடு மசோதா விஷ​யத்​தில் மனசாட்​சிப்​படி முடிவு எடுக்க வேண்​டும். மகளிருக்கு அதி​காரம் அளிக்க நமக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்​துள்​ளது. எனவே, அவர்​களுக்​கான புதிய வாய்ப்​பு​களை பறிக்​காதீர்​கள். தயவுசெய்து உரிய பரிசீலனை செய்​து, முழுஉணர்​வுடன் முடிவு எடுத்​து, மகளிர் இடஒதுக்​கீடு மசோ​தாவை ஆதரிக்க வேண்​டும்’ என்று அதில் பிரதமர் தெரி​வித்​திருந்​தார்.

அமித் ஷா விளக்​கம்: மக்​களவை​யில் மசோதா குறித்து உள்​துறை அமைச்​சர் அமித் ஷா விளக்​கிப் பேசி​னார். தொகுதி மறுசீரமைப்​பின் முடி​வில் தமிழகம் உள்​ளிட்ட தென் மாநிலங்​களுக்கு எத்​தனை தொகு​தி​கள் அதி​கரிக்​கும் என்ற பட்​டியலை​யும் அவர் வெளி​யிட்​டார்.

தொகுதி மறுசீரமைப்பு காரண​மாக தென் மாநிலங்​களுக்கு அதிக இழப்பு ஏற்​படும் என்று குற்​றச்​சாட்டு எழுந்த நிலை​யில், இந்த பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. இத்​துடன், மறு​வரையறை மூலம் தொகு​தி​கள் எண்​ணிக்கை 850 ஆக அதி​கரிக்​கப்​படும்​போது எந்​தெந்த மாநிலங்​களுக்கு எவ்​வளவு தொகு​தி​கள் அதி​கரிக்​கும் என்​பது குறித்​தும் விளக்​கம் அளித்​தார்.

‘‘தமிழகத்​துக்கு தற்​போது 39 எம்​.பி. தொகு​தி​கள் உள்ள நிலை​யில் தொகுதி மறு​வரையறைக்கு பின்​னர் இந்த எண்​ணிக்கை 59 ஆக உயரும். இதே​போல, எம்​.பி. தொகு​தி​கள் எண்​ணிக்கை கேரளா​வில் 20-ல் இருந்து 30 ஆகவும், ஆந்​தி​ரா​வில் 25-ல் இருந்து 38 ஆகவும், கர்​நாட​கா​வில் 28-ல் இருந்து 42 ஆகவும் உயரும். தொகுதி மறு​வரையறை​யால் தமிழகத்​துக்கு எந்​த​வித இழப்​பும் ஏற்​ப​டாது. மக்​களவை​யில் தமிழகத்​தின் பிர​தி​நி​தித்​து​வம் 7.18-ல் இருந்து 7.23 சதவீதம் ஆக அதி​கரிக்​கும்.

தொகுதி மறு​வரையறை ஆணை​யத்​தின் அறிக்கை நாடாளு​மன்​றத்​தால் நிறைவேற்​றப்​பட்​டு, குடியரசுத் தலை​வரின் ஒப்​புதல் பெற்ற பிறகே அமல்​படுத்​தப்​படும். 2029-க்கு முன்பு வரை தற்​போது இருக்​கும் இடங்​களின் எண்​ணிக்​கை​யிலேயே அனைத்து தேர்​தல்​களும் நடை​பெறும்’’ என்று அமித் ஷா பேசி​னார்.

போதிய ஆதரவு இல்லை: அவர் பேசி முடித்​ததும், மசோதா மீது வாக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. மொத்​தம் 528 எம்​.பி.க்​கள் வாக்​களித்​தனர். மசோ​தாவுக்கு ஆதர​வாக 298 பேரும், எதி​ராக 230 பேரும் வாக்​களித்​தனர். மசோதா நிறைவேற மூன்​றில் 2 பங்கு ஆதரவு தேவை. அதாவது, மக்​களவை​யில் 352 எம்​.பி.க்​களின் ஆதரவு இருந்​தால் மட்​டுமே மசோ​தாவை நிறைவேற்ற முடி​யும்.

ஆனால் 298 பேர் மட்டுமே ஆதர​வாக வாக்​களித்​த​தால் மகளிர் இடஒதுக்​கீடு மசோதா தோல்வி அடைந்​தது. நேற்​றைய வாக்​கெடுப்​பின்​போது மகளிர் இடஒதுக்​கீடு மசோதா மட்​டுமே வாக்​கெடுப்​புக்கு விடப்​பட்​டது. மற்​ற 2 மசோ​தாக்​கள்​ மீதும்​ வாக்​கெடுப்பு நடத்​தப்​பட​வில்​லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது: நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று தோல்வி அடைந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது. முக்கிய விவகாரங்களில் கொள்கை முடிவுகள், நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT