புதுடெல்லி: மக்களவையில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்படாதது அரசின் தோல்வி அல்ல என்று மத்தியஅமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் சிறப்பு கூட்டம் கடந்த 16-ம் தேதி தொடங்கிது. அன்றைய தினம் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த வகை செய்யும் அரசியல் சாசன திருத்த (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகியவை மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் மீது நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மசோதா தோல்வி அடைந்தது. இந்நிலையில், 3-ம் நாளான நேற்று மக்களவை கூடியதும், சபாநாயகர் ஓம் பிர்லா நிறைவு உரையாற்றினார். இத்துடன் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்தது. இதையடுத்து, நாடாளுமன்றம் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘எங்களிடம் பெரும்பான்மை உள்ளது. ஆனால், அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்ற தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை எங்களுக்குக் கிடைக்கவில்லை. இதனால் வாக்கெடுப்பின் போது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்தது.
எனினும், இதை அரசின் தோல்வியாகக் கருதக் கூடாது. இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டதால், பெண்களின் கோபத்தை காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பெண்களுக்கு எதிரானவர்கள் என்ற பெயரால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்க்கட்சிகள் அனுபவிக்க வேண்டியிருக்கும்’’ என்றார்.