பிரதிநிதித்துவப் படம்
உயர்கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உயர் தரத்தில் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் உரையில் அவர் கூறியுள்ளதாவது: நாட்டின் உயர்கல்வியை ஊக்குவிக்க அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. முக்கிய தொழில்துறை மற்றும் தளவாட வழித்தடங்களுக்கு அருகில் 5 பல்கலைக்கழக நகரங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினீயரிங், கணிதப் படிப்புகளை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய மகளிர் விடுதிகளை மத்திய அரசு அமைக்கும். நாடு முழுவதும் பெண் குழந்தைகள் கல்வி கற்க இதுபோல் 700 மகளிர் விடுதிகள் அமைக்கப்படும்.
அதேபோல், கல்வித்துறைக்கும், தொழில்துறைக்கும் இடையே பாலமாக இருக்கும் வகையில் தேசிய விருந்தோம்பல் நிறுவனம் (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹாஸ்பிட்டாலிட்டி) அமைக்கப்படும். இந்தியர்களின் பாரம்பரிய மருத்துவத்தை ஊக்குவிக்க 3 புதிய அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்கள் (All India Institutes of Ayurveda) நிறுவப்படும். இதன்மூலம் நமது பாரம்பரியத்தையும் தக்க வைத்துக் கொள்ள முடியும். மேற்கொண்டு மக்கள் பாரம்பரிய மருத்துவத்தின் மூலம் இன்னும் பலன் அடைய உதவிகரமாகவும் இருக்கும்.
அதேபோல் தேசிய டிசைன் இன்ஸ்டிடியூட்டும் உருவாக்கப்படும். 15 ஆயிரம் பள்ளிகள், 500 கல்லூரிகளில் ஏவிஜிசி கன்டென்ட் கிரியேட்டர் ஆய்வகங்கள் உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் துணை மருத்துவ நிபுணர்கள் (ஏஎச்பி) உருவாக்கப்படுவர். இவ்வாறு பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.