இந்தியா

கொன்றுவிடுவோம் என மிரட்டி பெண் பாலியல் வன்கொடுமை - ஹரியானாவில் பயங்கரம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஹரியானாவின் பரிதாபாத், மெட்ரோ சவுக் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு 25 வயது பெண் ஒருவர் கல்யாண்புரி சவுக் செல்வதற்காக ஆட்டோவுக்கு காத்திருந்தார். அப்போது மாருதி வேனில் வந்த இரு ஆண்கள் லிப்ட் தருவதாக கூறி அப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பிறகு ஓடும் வேனில் இருந்து வெளியே தள்ளிவிட்டு, தப்பிச் சென்று விட்டனர்.

இது தொடர்பாக சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் உ.பி. மற்றும் ம.பி.யை சேர்ந்த இருவரை பரிதாபாத் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக பரிதாபாத் போலீஸார் கூறுகையில், “வேனில் இருந்து வெளியே வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அந்தப் பெண் ஒருவழியாக சமாளித்து தனது சகோதரியை உதவிக்கு அழைத்துள்ளார். இதையடுத்து அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவ நாளில் அந்தப் பெண் தனது தோழியின் வீட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். எந்த வாகனமும் கிடைக்காததால் அவருக்குத் தாமதமாகிவிட்டது. அவருக்கு லிப்ட் கொடுத்த இரு ஆண்களும் கல்யாண்புரி சவுக் செல்வதற்கு பதிலாக குருகிராம் சாலையில் சென்றுள்ளனர். பிறகு இந்த கொடூர குற்றத்தை இழைத்துள்ளனர்” என்றார்.

டெல்லியில் 13 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த நிர்பயா வழக்கை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நேற்று கூறுகையில், “எங்கள் வீட்டுப் பெண் உதவி கேட்டு கூக்குரலிட்டபோது அவரை கொன்று விடுவோம் என்று மிரட்டி இருவரும் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், “அப்பெண்ணுக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக 12-க்கும் மேற்பட்ட தையல் போடப்பட்டுள்ளன. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது” என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். “மூன்று குழந்தைகளுக்கு தாயான அப்பெண், கணவரை விட்டுப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்ததாக போலீஸார் கூறினர்.

SCROLL FOR NEXT