லாத்தூர்: மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டம், சாகூர் தாலுகா, கல்குட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முண்டுபாய் இரப்பா தாவ்ரே என்ற பெண்மணி. இவர் கடந்த 1995-ல் தனது மகள் திருமணச் செலவுக்காக, உள்ளூர் வட்டிக் கடைக்காரரிடம் 4.5 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து ரூ.25,000 கடன் வாங்கி இருந்தார்.
விளைச்சலைப் பகிர்ந்துகொள்வதாகக் கூறி நிலத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்த அந்த வட்டிக் கடைக்காரர், போலியாக நிலத்தை தன் பெயருக்கு விற்பனைப் பத்திரமாக மாற்றிக் கொண்டார். சில ஆண்டுகளுக்குப் பின், முண்டுபாய் ரூ.2.5 லட்சத்துடன் நிலத்தை மீட்கச் சென்றபோது, வட்டித் தொகை ரூ.10 லட்சமாக உயர்ந்துவிட்டதாகக் கூறி நிலத்தைத் தர மறுத்துள்ளார்.
இதையடுத்து, குடும்பத்தாரின் துணையுடன் முண்டுபாய் மாவட்ட நிர்வாகத்தை அணுகினார். லாத்தூர் மாவட்ட ஆட்சியர் பாரத் பஸ்தவாத், வட்டாட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அமோல் தம்பே ஆகியோர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 1995-ல் நடந்த மோசடி தெரியவரவே, நிலப் பதிவேடுகள் உடனடியாக திருத்தப்பட்டு, எவ்விதக் கட்டணமும் இன்றி நிலம் மீண்டும் முண்டுபாயின் பெயருக்கே மாற்றப்பட்டது. நிலத்தை மீட்க உதவிய ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் உள்ளூர் வட்டாட்சியர் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.