ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் உள்ள கார்கெர் மாவட்டத்தின் அடர்ந்த வனப் பகுதியில் ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்தன.
இதன் அடிப்படையில் சோட்டேபெத்தியா-பர்தாப்பூர் காவல் எல்லைக்குட்பட்ட வனப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் மச்பள்ளி பகுதியில் பாதுகாப்புப் படையினரை நோக்கி மாவோயிஸ்ட்கள் துப்பாக்கியால் சுட்டதால் அங்கு இரு தரப்பிலும் கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு பிறகு அப்பகுதியில் இருந்து பெண் மாவோயிஸ்ட் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.
இவர் மாவோயிஸ்ட் பகுதிக்குழு உறுப்பினர் (ஏசிஎம்) அந்தஸ்து கொண்ட கமாண்டர் ரூபி என அடையாளம் காணப்பட்டார். மேலும் இவர் கடந்த ஆண்டு மன்பூர்-மோஹ்லா மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட 'தண்டகாரன்யா சிறப்பு மண்டலக் குழு தலைவர்' விஜய் ரெட்டியின் மனைவி ஆவார்.
சரண் அடையுமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தபோதிலும் ரூபி தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார். பஸ்தாரில் எஞ்சியிருந்த கடைசி தெலுங்கு வம்சாவளி மாவோயிஸ்ட்களில் இவரும் ஒருவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூபி கொல்லப்பட்டது பஸ்தாரில் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. ஏற்கெனவே பலவீனம் அடைந்துவரும் மாவோயிட்களை இது மேலும் பலவீனப்படுத்தும் என கருதப்படுகிறது.
கான்கெர் வனப் பகுதியில் சுமார் 10 மாவோயிஸ்ட்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக பாதுகாப்பு படையினர் கருதுகின்றனர். அவர்களையும் பிடிக்க வனப் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர்.