இந்தியா

பஞ்சாப்: பச்சிளம் குழந்தையை ரூ.5 லட்சத்துக்கு விற்றதாக பெண் புகார்

செய்திப்பிரிவு

ஜலந்தர்: பஞ்சாபை சேர்ந்த பெண் ஒருவர், தனது பச்சிளம் ஆண் குழந்தையை, போதைப்பொருளுக்கு அடிமையான தனது முன்னாள் கணவன் ரூ.5 லட்சத்துக்கு விற்றுவிட்டதாக புகார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் போலீஸாரிடம் ஷிவானி என்ற பெண் அளித்துள்ள புகார் வருமாறு: எனக்கும் சிவா என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக சுமார் 4 ஆண்டுகளுக்கு முன் நானும் எனது கணவரும் பிரிந்தோம். விவாகரத்துக்குப் பிறகு இருவரும் மறுமணம் செய்து கொண்டோம். நான் எனது பள்ளித் தோழனைத் திருமணம் செய்து கொண்டேன்.

இதில் கர்ப்பமாக இருந்த நான் 3 மாதங்களுக்கு முன் எனது 2-வது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஒரு வாடகை அறைக்கு மாறி தனியே வசித்து வந்தேன். அப்போது எனது முதல் கணவர் சிவா, எங்களுக்குப் பிறந்த 2 குழந்தைகள் மற்றும் இந்நாள் மனைவியுடன் வந்து என்னைப் பார்த்தார். பிறகு மருத்துவமனையில் எனது பிரசவத்துக்கு அவரும் அவரது மனைவியும் உதவியாக இருந்தனர்.

கடந்த மே 25-ம் தேதி எனது பச்சிளம் ஆண் குழந்தைக்குத் தடுப்பூசி போட வேண்டும் என குழந்தையை சிவா தூக்கிச் சென்றார். பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. குழந்தை இறந்துவிட்டதாகவும் அதை அடக்கம் செய்து விட்டதாகவும் அவரது மனைவி கூறினார்.

இந்நிலையில், பெண் ஒருவர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு குழந்தையை ரூ.5 லட்சத்துக்கு தான் வாங்கியதாகவும் தற்போது குழந்தையைப் பராமரிக்க முடியவில்லை என்பதால், திருப்பித் தர தயாராக இருப்பதாவும் கூறினார். அதன் பிறகு அப்பெண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை.

எனது முதல் கணவன், சிட்டா என்ற போதைப்பொருளுக்கு அடிமையானவர். இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து அவர் போதைப் பொருள் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளார். அவரை கைது செய்து எனது குழந்தையை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்தப் பெண் தனது புகாரில் கூறியுள்ளார். இப்புகார் மீது விசாரணை நடத்துமாறு ரமா மண்டி போலீஸாருக்கு ஜலந்தர் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT