

சென்னை: மாநகராட்சியில் மேயர் பிரியா உள்ளிட்ட 157 கவுன்சிலர்கள் சட்ட விதிகளின்படி சொத்துக் கணக்கை அளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டத்தை கடந்த 1998-ம் ஆண்டு கொண்டு வந்தது. இதில் கடந்த 2022-ம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில் 34ஏ என்ற புதிய விதி சேர்க்கப்பட்டது.
அதில், ``நகர்ப்புற உள்ளாட்சிகளில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், துணை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் தங்கள் சொத்துக் கணக்கு, தங்கள் மனைவி, குழந்தைகளின் சொத்துக் கணக்குகளை பதவியேற்ற 90 நாட்களுக்குள் மாநகராட்சியில் சமர்ப்பிக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு தமிழ்நாடு நகரப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் கொண்டுவரப்பட்டன. அதில் 183-வது விதியில், ``அந்த சொத்துக் கணக்கு விவரங்களை மாநகராட்சி ஆணையரிடம் வழங்க வேண்டும். அதை ஆணையர் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கர் என்பவர் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் தாக்கல் செய்த சொத்துக் கணக்கு விவரங்கள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த மாநகராட்சி நிர்வாகம், ``சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டு கவுன்சிலர்களில் 157 பேர் சொத்துக் கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதில் 4 பேர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டனர்.
2 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர். 43 கவுன்சிலர்கள் மட்டுமே தங்கள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர்'' என தெரிவித்திருந்து. சொத்துக் கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் பட்டியலையும் மாநகராட்சி வழங்கியுள்ளது.
அதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார் உள்ளிட்ட 157 கவுன்சிலர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களின் பதவிக்காலம் இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசின் விதிகளை மதிக்காமல் மக்கள் பிரதிநிதிகளாக தொடர்ந்து வருவது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
இவர்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ``சட்ட விதிகளில் தலைமை, துணை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், கவுன்சிலர்கள் பதவியேற்ற 90 நாட்களுக்குள் சொத்துக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தான் உள்ளது.
தவறினால், அவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக எந்த அம்சங்களும் இடம்பெறவில்லை. இருப்பினும் 30 நாட்களுக்குள் தங்கள் சொத்துக் கணக்குகளை தாக்கல் செய்யுமாறு அனைத்து கவுன்சிலர்கள், மேயர், துணை மேயருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றனர்.