இந்தியா

“எந்த விலை கொடுத்தாவது ஜூலை 20 வரை உயிரோடு இருப்பேன்” - சோனம் வாங்சுக்

மோகன் கணபதி

புதுடெல்லி: எந்த விலை கொடுத்தாவது ஜூலை 20 வரை உயிரோடு இருப்பேன் என்றும், அன்றைய தினம் நடைபெற உள்ள போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்றும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.

தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில், டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 28 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டத்தில் பங்கேற்று சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மேற்கொண்டு வரும் தொடர் உண்ணாவிரதம் இன்று 20-வது நாளை எட்டியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி கூட உள்ளதை முன்னிட்டு அன்றைய தினம், நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்று கோரிக்கை மனு அளிக்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஆதரவாளர்களிடம் பேசிய சோனம் வாங்சுக், “நான் வெளியில் பலவீனமாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் மிகவும் வலிமையாக இருக்கிறேன். நீங்கள் அனைவரும் உள்ளேயும் வெளியேயும் வலிமையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நாம் அமைதிப் பேரணியை நடத்தும்போது இந்த ஆற்றல் நமக்குத் தேவைப்படும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சென்று ஜனநாயகத்தின் ஆலயத்தில் நமது கோரிக்கையை முன்வைப்போம்.

எந்த விலை கொடுத்தாவது ஜூலை 20 வரை நான் உயிரோடு இருப்பேன். நீங்கள் வராமல் ஜூலை 20 போராட்டம் வெற்றிபெறவில்லை என்றால், நான் ஆவியாக திரும்பி வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சோனம் வாங்சுக்குக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அவரது உடல்நிலை ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாக எச்சரித்துள்ளனர். உண்ணாவிரதத்தைத் தொடர்வது உறுப்புச் சிதைவு உள்ளிட்ட தீவிர உடல்நலப் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வராத நிலையில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வது தவறான செய்தியைச் சொல்வதாக ஆகிவிடும் என்று கூறி உண்ணாவிரதத்தை நிறுத்த வாங்சுக் மறுத்துவிட்டார்.

ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி நடத்த உள்ள பேரணியை வெற்றிபெறச் செய்வதில் மட்டுமே இப்போது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த பேரணியில் அதிக அளவில் மக்கள் கலந்து கொள்ளவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT