

ஷாங்காய்: செயற்கை நுண்ணறிவு என்பது 21-ம் நூற்றாண்டின் மிகப் பெரிய வாய்ப்பு என்று தெரிவித்துள்ள ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ், அனைத்து நாடுகளுக்கும் இதன் பலன்கள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஷாங்காயில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய அந்தோணியோ குத்தேரஸ், “செயற்கை நுண்ணறிவு என்பது 21-ம் நூற்றாண்டின் மிகப் பெரிய வாய்ப்பு. ஆனால், அது மிகப் பெரிய அபாயங்களில் ஒன்றாகவும் மாறக்கூடும்.
மனிதகுலத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பம் முழு மனிதகுலத்தாலும் வடிவமைக்கப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தை ஒரு சில நாடுகள் அல்லது நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது. ஒவ்வொரு நாட்டுக்கும் இதில் ஓர் இடம் தேவை.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த தங்கள் நிபுணத்துவத்தை நாடுகள் பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்த தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் வளரும் நாடுகளுக்கு வலுவான பங்கு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்தவும், கல்வியை மாற்றி அமைக்கவும், உணவு அமைப்புகளை வலுப்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் செயற்கை நுண்ணறிவுக்கு மகத்தான ஆற்றல் உள்ளது. இது நிலையான வளர்ச்சி இலக்குகளை முன்னெடுத்துச் செல்ல உதவும்.
மனிதகுலத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் இன்னும் இணைய வசதி இன்றி உள்ளனர். அதேநேரத்தில், கணினி ஆற்றல், தொழில்நுட்ப நிபுணத்துவம், முதலீடு ஆகியவை ஒருசில நாடுகள் மற்றும் நிறுவனங்களிடம் பெருமளவில் குவிந்துள்ளன.
இந்த ஏற்றத்தாழ்வுகள் சரிசெய்யப்படாவிட்டால், செயற்கை நுண்ணறிவு சமத்துவமின்மை அதிகரிப்பதற்கும், வருமானம், வாய்ப்பு, பாதுகாப்பு ஆகியவற்றில் பிளவுகளுக்கும் வழிவகுக்கும்.
இந்த இடைவெளியைக் குறைக்க உதவுவதற்காக சீனா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகள், ஐநா ஆதரவுடனான செயற்கை நுண்ணறிவுத் திறன் மேம்பாடு பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான உலகளாவிய வலையமைப்புக்கு மையங்களை ஏற்கனவே பரிந்துரைத்துள்ளன.
செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய நிதியத்துக்கான பரிந்துரைகள் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இந்த இரு முயற்சிகளுக்கும் நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு அனைவருக்கும் பயனளிப்பதை உறுதி செய்வதற்கு, வளரும் நாடுகளில் இதற்கான திறனை விரிவுபடுத்த வேண்டும், சர்வதேச பாதுகாப்புத் தரங்களை நிறுவ வேண்டும், செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழலுக்கு மேலும் ஏற்றதாக மாற்ற வேண்டும்.
வளரும் நாடுகள் தங்களின் சொந்த தரவுகள், மொழிகள், நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவதற்கான கருவிகளைக் கொண்டிருக்க வேண்டும். அதேநேரத்தில் அரசாங்கங்கள் சர்வதேச சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சோதனை மற்றும் இடம் மேலாண்மைக்கான பொதுவான அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
எந்த ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பும் பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்படுவதற்கு முன்பாக குழந்தைகளிடம் கொடுக்கப்படக்கூடாது.
செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மாற்றம், ஏற்றத்தாழ்வுகளை குறைக்குமா அல்லது அதிகரிக்குமா, அதிகாரத்தைக் குவிக்குமா அல்லது வாய்ப்புகளை விரிவுபடுத்துமா என்பதே தீர்மானிப்பதற்கான அளவுகோல்” என தெரிவித்தார்.