இந்தியா

போராட்டத்தால் வர்த்தகம் பாதிப்படைந்தால் தலையிடுவோம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் உறுதி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: போராட்டம் மற்றும் கட்டுப்பாடுகளால் வர்த்தகம் பாதிப்பை சந்தித்தால் அந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடும் என தெரிவித்த தலைமை நீதிபதி, கரப்பான் பூச்சி கட்சி நடத்தும் போராட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

போராட்டங்கள் காரணமாக பண்டிகை கால வர்த்தகம் பாதிக்கப்படுவதாகக் கூறி டெல்லி வணிகர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த, நீதிபதி ஜாய் மால்யா பக்‌ஷி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணக்கு வந்தது. அப்போது, வணிகர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தெகத்ராய் ஆஜராகி, “தற்போது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் அறிவித்ததன் காரணமாக என்.டி.எம்.சி. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக திடீரென 'கன்னாட் பிளேஸ்' பகுதியில் கடைகளை திறக்கக் கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

'கன்னாட் பிளேஸ்' பகுதியில் உள்ள சென்ட்ரல் பூங்காவும் மூடப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. தற்போது வரை சுமார் ரூ.250 கோடி அளவிலான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கரப்பான் பூச்சி கட் சியின் போராட்டத்திற்கு தடை விதிப்பதோடு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்" என்றார்.

அப்போது நீதிபதிகள் கூறும்போது, "வணிகர்கள். சிறு சிறு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் இந்த போராட்டத்தாலும், கட்டுப்பாடுகளாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியும். எனவே இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.

அதே வேளையில் இந்த நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஒரு தரப்பினர் போராடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், அது அரசியல் சாசன உரிமை என்றும் கூறுகின்றனர். ஒரு தரப்பினர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். மற்றொரு தரப்பினர் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோருகின்றனர். எனவே, இவை அனைத்தையும் ஆராய்ந்து முடிவெடுக் கப்படும்.

அதேவேளையில், தொடர்ச்சியாக போராட்டங்கள் மற்றும் கட்டுப்பாடு விதிப்பதால் வர்த்தகம் கடும் பாதிப்பை சந்தித்தால் உச்ச நீதிமன்றம் தலையிடும்" என்று தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கில் தற்போது எந்த இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கு விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT