இந்தியா

வலுக்கும் ‘சீட்’ பகிர்வு மோதல்: உ.பி.யில் கரை சேருமா காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி?

போத்தி ராஜ்.க

வரலாற்றிலில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாதவர்கள், பழைய வரலாறே மீண்டும் வாழ வேண்டியிருக்கும் என்பது அரசியல் சொலவடை.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த  இரண்டு (2017, 2022) சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெறும் 7 மற்றும் 2 இடங்களை மட்டுமே வென்ற தேசியக் கட்சியான காங்கிரஸ், வரும் 2027 சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலத்தில் வலுவாக இருக்கும் சமாஜ்வாதி கட்சியிடம் 45 சதவீதத் தொகுதிகளைக் கேட்டுள்ளது.

‘இரண்டு தேர்தல்களிலும் மொத்தமாக 10 இடங்களில் கூட வெல்லாத காங்கிரஸ், இந்தத் தேர்தலில் 181 இடங்களைக் கோருவது இந்திய தேர்தல் வரலாற்றிலேயே விநோதமான ஒரு பேரம். காங்கிரஸ் கட்சி இப்படி ஆசைப்பட அந்தக் கட்சிக்குத் தார்மிக உரிமை இருக்கிறதா?’ என்ற கேள்விதான் உத்தரப் பிரதேச அரசியல் வட்டாரத்தில் இப்போது எதிரொலிக்கிறது.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவின் ‘பிடிஏ’ (PDA) வியூகம்தான் வெற்றிக்கு மூலமாக இருந்தது. ஆனால், காங்கிரஸ் தனக்குக் கிடைத்த 6 வெற்றிகள் தன்னுடைய ஆதரவுக்கானது என நினைக்கின்றது. வெறும் 2.33 சதவீத வாக்குகளையும், 2 எம்.எல்.ஏ-க்களை மட்டுமே கையில் வைத்துள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி வசம் உள்ள 22 சிட்டிங் தொகுதிகளையும் ‘அபரிமிதமான ஆசை’யில் கேட்கிறது என்று அகிலேஷ் ஆதரவு வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.

கடந்த தேர்தலில் 380 தொகுதிகளில் டெபாசிட் இழந்து தோற்றது காங்கிரஸ் கட்சிக்கு நினைவில் இல்லாமல் போகலாம். ஆனால், 2017-ல் 114 இடங்களைக் கொடுத்து, அதில் 107 தொகுதிகளை பாஜகவுக்குத் தாரை வார்த்த கசப்பான வரலாற்றை அகிலேஷ் யாதவ் அவ்வளவு எளிதில் மறக்கமாட்டார். எப்போதுமே ‘பெரிய அண்ணன்’ மனநிலையில் செயல்படும் காங்கிரஸ் கட்சி, கூட்டணிப் பேச்சு வார்த்தையின் தொடக்கத்திலேயே  அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முனைகிறதா என்ற கேள்வி இங்கே தொக்கி நிற்பதாக உ.பி. அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

37 ஆண்டு கால நிறைவேறாத ஆசை:

வரும் 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச  சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - சமாஜ்வாதிக் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளன. 1989-க்குப் பிறகு  அங்கு ஆட்சியைப் பிடிக்க முடியாமல் காங்கிரஸ் கட்சி தேய்ந்து வருகிறது. மாநிலம் தழுவிய அளவில் காங்கிரஸுக்குச் சுயமாக வெற்றி பெறும் அளவுக்குத் தற்போது மக்கள் ஆதரவு இருப்பதாக அக்கட்சி நினைக்கிறது. ஆனால், கள யதார்த்தம் வேறு மாதிரியாக உள்ளது.

வாக்கு வங்கிச் சிதறல்:

1980-கள் வரை காங்கிரஸின் பலமாக இருந்த உயர் சாதியினர், தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய மூன்று சமூகங்களும் இன்று பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஆசாத் கட்சி எனப் பிரிந்துவிட்டனர்.

காலத்துக்கு ஒவ்வாத கொள்கை:

1990-களில் உருவான பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு அரசியலைச் சமாஜ்வாதி கட்சியும், இந்துத்துவ அரசியலை பாஜகவும் கையில் எடுத்தன. இந்த இரு துருவ அரசியலுக்கு இடையே காங்கிரஸின் கொள்கை எடுபடாமல் போனது.

கட்டமைப்பு மற்றும் தலைமை இடைவெளி:

நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில்  ஏறக்குறைய 80 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்கள் இருக்கின்றன. அனைத்து கிராமங்களிலும் பூத் கமிட்டியை நிர்வகிக்கும் அளவுக்கு காங்கிரஸிடம் இப்போது தொண்டர் பலம் இல்லை. உத்தரப் பிரதேசத்தில் சோனியா, ராகுல் காந்தி  போட்டியிடாமல் போன பின்பு, அனைத்துச் சமூகங்களையும் அரவணைத்துச் செல்லும் வலுவான மாநிலத் தலைவர் இல்லாதது அக்கட்சியின் பெரிய பலவீனமாகும்.

181 இடங்கள் சாத்தியமா?

கடந்த மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட 17 இடங்களில் 6 தொகுதிகளில் வென்று, தனது வாக்கு சதவீதத்தை 9.46 ஆக காங்கிரஸ் உயர்த்தியது. அந்த 6 தொகுதிகளிலும் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவீதம் (44.2%), சமாஜ்வாதியை விட (43.4%) சற்று அதிகமாக இருந்தது.

இருப்பினும், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்ற 6 மற்றும் நெருங்கிய 2 மக்களவைத் தொகுதிகளைச் சேர்த்தால்கூட, சுமார் 35 முதல் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி முன்னிலை பெற்றது.

இந்த நிலையில் காங்கிரஸ் 181 இடங்களைக் கேட்பது கள யதார்த்தத்துக்கு முரணானது. ‘தேர்தல் செயல்பாடு, கள நிலவரம், வலிமை ஆகியவற்றை வைத்து தான் கேட்கும் தொகுதிகள் நியாயமானதா என காங்கிரஸ் நிரூபிக்க முடியுமா?’ என சமாஜ்வாதி கட்சி செய்தித் தொடர்பாளர் உதய்வீர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிடிவாத காங்கிரஸும், கறார் சமாஜ்வாதியும்

தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தி, பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.

ரேபரேலி, அமேதி, சுல்தான்பூர், லக்னோ கிழக்கு, கான்பூர் கேன்டன்மெண்ட், பாக்பத், லோனி, மதுரா, ஆக்ரா ரூரல், மீரட் தெற்கு, வாரணாசி தெற்கு, அலகாபாத் வடக்கு, தெற்கு மற்றும் பிலீபிட் உள்ளிட்ட தொகுதிகளை காங்கிரஸ் கோருகிறது. இதில் பல தொகுதிகள் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்ற இடங்கள் மற்றும் பாஜக பலமாக உள்ள தொகுதிகளாகும்.

இதனிடையே, ‘181 இடங்களுக்குத் துளியும் வாய்ப்பில்லை; வெற்றி வாய்ப்பு மற்றும் வாக்கு வங்கி சமன்பாடு அடிப்படையில் 50 முதல் 80 தொகுதிகளுக்குள்தான் வழங்கப்படும்’ என சமாஜ்வாதி வட்டாரங்கள் கறாராகத் தெரிவிக்கின்றன.

சந்திரசேகர் ஆசாத் - ஒவைசி கூட்டணி சவால்

மறுபுறம், நாகிணா தொகுதியில் தனித்து வென்ற சந்திரசேகர் ஆசாத், ஜாதவ் அல்லாத தலித் இளைஞர்களை ஈர்த்து மேற்கு உத்தரப் பிரதேசத்தில் வலுவடைந்து வருகிறார். மேலும், அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் (AIMIM) கட்சியுடன் இணைந்து ‘சமாஜிக் பரிவர்த்தன் மோர்ச்சா’ என்ற புதிய கூட்டணியையும் அவர் அறிவித்துள்ளார். இது சமாஜ்வாதியின் பிடிஐ (PDA) வியூகத்துக்கு சாதகமான தலித் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில்  19 முதல் 20 சதவீதம் உள்ள முஸ்லிம் வாக்குகளும், 9 முதல் 10 சதவீதம் உள்ள யாதவ் வாக்குகளும் இணைவதே சமாஜ்வாதி கட்சியின் பலம். கடந்த மக்களவைத் தேர்தலில் 92 சதவீத முஸ்லிம் வாக்குகள் இக்கூட்டணிக்குக் கிடைத்த நிலையில், 2027-ல் ஒவைசி - ஆசாத் கூட்டணி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் முஸ்லிம் வாக்குகளைப் பிரித்தால்கூட, அது சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணிக்குப் பெரும் பின்னடைவாக அமையும்.

யார் விலை கொடுப்பது?

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனது பழைய பெருமையை மீட்டெடுக்க விரும்புவதில் தவறில்லை. ஆனால் அதற்கான விலையைச் சமாஜ்வாதி கட்சி கொடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதுதான் அரசியல் முரண். பாஜகவை வீழ்த்துவதுதான் இண்டியா கூட்டணியின் முதன்மையான இலக்கு என்றால், தொகுதிப் பங்கீட்டில் ‘கவுரவத்தை’ விட ‘வெற்றி வாய்ப்பே’ அளவுகோலாக இருக்க வேண்டும் என்கின்றனர் உத்தரப் பிரதேச அரசியல் பார்வையாளர்கள்.

வலுவான பூத் கட்டமைப்பு இல்லாமல் 181 தொகுதிகளில் போட்டியிடத் துடிப்பது, தோல்வியை வலிய சென்று வாங்குவதாகவே முடியும். காங்கிரஸின் இந்த ‘மெகா டிமாண்ட்’ பேரம் பேச்சுவார்த்தைக்காக எழுப்பப்பட்டதா அல்லது கூட்டணியை உடைக்கும் உள்நோக்கம் கொண்டதா என்பது விரைவில் தெரிந்துவிடும். ஆனால், எதிர்க்கட்சி முகாமில் ஏற்படும் ஒவ்வொரு சலசலப்பும் ஆளுங்கட்சியான பாஜகவுக்குப் புதிய உத்வேகத்தையே கொடுக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT