திஸ்புர்: அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை எதிர்த்து பெண் வேட்பாளர் பிதிஷா நியாக் என்பவரைக் காங்கிரஸ் கட்சி களமிறக்கி உள்ளது. இதனால் கடந்த 25 ஆண்டுகளாக சர்மா செல்வாக்குடன் உள்ள ஜலுபாரி தொகுதியில் இந்த முறை பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக சார்பில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆட்சியைத் தக்க வைக்க தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில், அவர் போட்டியிடும் ஜலுபாரி தொகுதி இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ஏனெனில், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை எதிர்க்க அரசியலில் அவ்வளவு அனுபவமே இல்லாத பெண் பிதிஷா நியாக் என்பவரை காங்கிரஸ் களமிறக்கி உள்ளது.
ஜலுபாரியில் ஹிமந்தா மக்களிடம் மிகுந்த செல்வாக்குடன் இருக்கிறார். கடந்த 2001 தேர்தலில் அசாம் கண பரிஷத்தின் வேட்பாளரும் செல்வாக்குள்ள அமைச்சருமான பிரிகு குமார் புக்கானை எதிர்த்து சர்மா வென்றார். அதன் பின் ஜலுபாரியில் சர்மாவின் செல்வாக்கு குறையவில்லை. இந்தச் சூழ்நிலையில்பிதிஷாவால் தேர்தலில் ஈடுகொடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டுதான் காங்கிரஸ் கட்சியில் பிதிஷா சேர்ந்துள்ளார்.
அரசியல் முன் அனுபவம் இல்லாவிட்டாலும், வீடு வீடாக வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் பிதிஷா. இதனால் சர்மாவுக்குத் தேர்தலில் கடும் போட்டியாக பிதிஷா இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் முதல்வராக இருப்பவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என்பதையும் அவர் உணர்ந்துள்ளார். இதுகுறித்து பிதிஷா கூறும்போது, ‘‘சர்மாவை எதிர்ப்பதில் எனக்கு பயமில்லை.
அசாம் மக்கள் சகோதர, சகோதரிகளாக வாழ விரும்புகின்றனர். வளர்ச்சியை, அமைதியை விரும்புகின்றனர். அவர்களுடைய கனவை நிறைவேற்ற பாடுபடுவேன்’’ என்கிறார் பிதிஷா.