இந்தியா

இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்

‘காஷ்மீரில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்கள்’

மோகன் கணபதி

ஸ்ரீநகர்: இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஃபரூக் அப்துல்லா, பகைமை முடிவுக்கு வரும் வரை காத்திருக்காமல் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, ஜம்மு நகரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, குல்காம் மற்றும் கிஷ்த்துவார் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களில் நடந்த இரண்டு பங்கரவாதத் தாக்குதல்களில் இரண்டு சிறப்பு காவல் அதிகாரிகள் கொல்லப்பட்டது குறித்தும், துணை ராணுவப் படையினர் மூவர் காயமடைந்தது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ஃபரூக் அப்துல்லா, “ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிந்துவிட்டதாக டெல்லியில் முன்வைக்கப்படும் வாதம் கவலை அளிக்கிறது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன என்று நான் முன்பே கூறினேன். அடுத்த தாக்குதல் எங்கே நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. பயங்கரவாதம் நீடித்தாலும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை. காஷ்மீர் இந்தியாவின் ஓர் அங்கமாகவே இருந்தது; இப்போதும் இருக்கிறது; எப்போதும் இருக்கும்.

பயங்கரவாதத்தை நிறுத்துமாறு நான் பாகிஸ்தானிடம் தொடர்ந்து கூறி வருகிறேன். பயங்கரவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது. பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தை மூலமே ஒரு தீர்வை நோக்கி முன்னேற முடியும்.” என தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையும் துப்பாக்கிக் குண்டுகளும் ஒன்றாக செல்ல முடியாது என்று மத்திய அரசு கூறி வருவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஃபரூக் அப்துல்லா, “அனைத்துத் தரப்பு துப்பாக்கிகளும் அமைதியாகும் வரை நீங்கள் காத்திருந்தால், அதற்குள் காலம் கடந்துவிடும். பகைமை முடிவுக்கு வரும் வரை காத்திருக்காமல் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும்.

ஈரான் மற்றும் உக்ரைனில் தற்போது எத்தகைய பேரழிவுகள் நிகழ்கின்றன என்பதை நாம் அறிவோம். போர்களும் ராணுவ மோதல்களும் அழிவை மட்டுமே கொண்டு வரும். பேச்சுவார்த்தைகள் மற்றும் பரஸ்பர தொடர்புகள் மூலமே நிரந்தரத் தீர்வுகளைக் காண முடியும்.

இந்த பிராந்தியத்தின் மிகப் பெரிய நாடு இந்தியா. அண்டை நாடுகளுடன் சுமுகமான மற்றும் இணக்கமான உறவைப் பேணுவதற்கான வழியை இந்திரா காந்தி ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். நாம் சார்க் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். அதன்மூலம் நாம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிக்கல்களைத் தீர்த்துக்கொண்டு முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் நோக்கி பயணிக்க முடியும்” என தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT