புதுடெல்லி: அரவிந்த் கேஜ்ரிவால், அவரது மகள் ஹர்ஷிதா கேஜ்ரிவால் ஆகியோருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக பஞ்சாப் காவல் துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ ஜர்னைல் சிங், பஞ்சாபின் மொஹாலி மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், ‘நவம்பர் 6-ம் தேதி எனது செல்போனுக்கு ஓர் அழைப்பும், ஒரு வாட்ஸ்அப் மெஸேஸும் வந்தன. அதில் பேசிய நபர், ‘நான் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவன். அரவிந்த் கேஜ்ரிவாலிடம் சொல். அவர் ரூ.7 கோடி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அவரையும், அவரது மகள் ஹர்ஷிதா கேஜ்ரிவாலையும் கொன்றுவிடுவேன்’ என தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், ஒரு முக்கிய பிரமுகர் என்பதால், இந்த மிரட்டல் தேசிய மற்றும் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியான என் மூலமாக கேஜ்ரிவாலுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் தீவிரமான குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்ய, தொலைபேசி அழைப்பு விவரப் பதிவுகள், ஐபி பதிவுகள் மற்றும் சாதனத்தின் இருப்பிடத்தைக் கண்டறிய வேண்டும். அச்சுறுத்தலுக்கு உள்ளான கேஜ்ரிவால் மற்றும் அவரது மகளுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில் மொஹாலி போலீசார், பாரதிய நியாய சன்ஹிதாவின் மிரட்டி பணம் பறித்தல் பிரிவு 308(4), குற்றவியல் மிரட்டல் பிரிவு 351(2), பிரிவு 351(4), அடையாளம் தெரியாத வகையில் தகவல் தொடர்பு மூலம் குற்றவியல் மிரட்டல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் சைபர் குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.