புதுடெல்லி: டெல்லி சாணக்கியபுரியில் பாகிஸ்தான் நாட்டின் தூதரகம் அமைந்துள்ளது. அதன் வளாகத்தில் விசா வழங்கும் பகுதியில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த தடுப்புகள் நேற்று முன்தினம் ஜேசிபி மூலம் இடித்து அகற்றப்பட்டன. மேலும் தூதரகத்தின் முன்பாக செங்கற்கள், கான்கிரீட் கலவையால் கட்டப்பட்டு இருந்த தடுப்புச் சுவரும் இடித்து தள்ளப்பட்டது.
தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் சுவர் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததால் இடித்து அகற்றப்பட்டதாக டெல்லி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், பாகிஸ்தானின் செயலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே அதன் தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்புகள் இடித்து அகற்றப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
டெல்லியில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு இருந்த பாதுகாப்பு தடுப்புகள் சமீபத்தில் இடித்து அகற்றப்பட்டன.
பாதுகாப்பு தடுப்புகளை அகற்ற வேண்டாம் என நாம் கோரிக்கை வைத்தபோதிலும் அந்த நாட்டு அரசு அதை கண்டுகொள்ளாமல் தடுப்புகளை இடித்து அகற்றியது. அதற்கு எதிர்வினையாற்றும் விதமாகவே டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் முன்பு இருந்த தற்காலிக கட்டமைப்புகள் இடித்து அகற்றப்பட்டன. இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.