புதுடெல்லி: “பிரதமர் நரேந்திர மோடியை அச்சுறுத்தும் விதமாக காங்கிரஸ் பொதுக்கூட்ட மேடையில் யாரும் பேசவில்லை. அவ்வாறு இருக்க, நாடாளுமன்றத்தில் இதை ஏன் ஒரு பிரச்சினையாக எழுப்ப வேண்டும்?” என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று காலை மக்களவை கூடியதும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சிலர் பேசியதாகக் குறிப்பிட்டார். அவர் தனது உரையில், ‘‘நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய சிலர், பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசினர். பிரதமரின் உயிரைப் பறிப்போம், அவரது சமாதியை தோண்டுவோம் என்றெல்லாம் கூறுவது இந்திய அரசியல் வரலாற்றில் மிகவும் துரதிருஷ்டவசமானது.
பிரதமருக்கு எதிரான இதுபோன்ற கருத்துக்கள் கவலை அளிப்பவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை. இத்தகைய பேச்சுகளை வெறுமனே கண்டிப்பதால் பயனில்லை. தற்போது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் இதற்காக அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
அவரது இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள், எழுந்து நின்று கூச்சலிட்டனர். பதிலுக்கு பாஜக உறுப்பினர்களும் எழுந்து நின்று கூச்சலிட்டனர். இதனால், அவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, அவையை பகல் 12 மணிக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஒம் பிர்லா அறிவித்தார்.
இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ‘‘நாடாளுமன்றத்தில் ஒரு அமைச்சரே அவை நடவடிக்கைகளை தொந்தரவு செய்கிறார். ஊடகங்கள் இது குறித்து கேள்வி எழுப்புவதில்லை. காங்கிரஸ் பொதுக்கூட்ட மேடையில் அவர் கூறுவது போல யாரும் பேசவில்லை. பொதுமக்களில் அல்லது கட்சி தொண்டர்களில் யாரோ ஒருவர் அவ்வாறு பேசியதாக நாங்கள் அறிந்தோம். ஆனாலும், அந்தப் பேச்சு தெளிவாக இல்லை.
அவ்வாறு இருக்க, இந்த விவகாரத்தை அவையில் ஏன் எழுப்ப வேண்டும்? அவர்கள் (ஆளும் கட்சியினர்) சபை நடப்பதை விரும்பவில்லை. சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து விவாதிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி இருந்தோம். ஆனால், அதைக்கூட அவர்கள் விவாதிக்க தயாரில்லை. ஆனால், நிலைமை முன் எப்போதும் இல்லாத வகையில் மோசமாக உள்ளது. நாம் அது குறித்து விவாதிக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் மாவட்ட காங்கிரஸ் மகளிரணி தலைவர் மஞ்சு லதா மீனா என்பவர், பிரதமர் மோடிக்கு எதிராக கடுமையாக பேட்டி அளித்துள்ளார். அவரது அந்த பேட்டி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.