புதுடெல்லி: தொழில் நிறுவனங்களின் வரிச் சுமை குறைக்கப்பட்டு உள்ளது. தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தாதது ஏன் என்று தொழிலதிபர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்திய வர்த்தக, தொழில் துறை கூட்டமைப்பின் (பிக்கி) பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பாஜக அரசு கடந்த 12 ஆண்டுகளாக இளைஞர்கள், விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு வருகிறது. இதன் காரணமாக சர்வதேச அளவில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. உலக வங்கி அண்மையில் ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில் இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் 50 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டு இருப்பதாக புகழாரம் சூட்டி உள்ளது.
கடந்த 1930-ம் ஆண்டில் தேசத்தந்தை மகாத்மா காந்தி, பிக்கியிடம் சுதேசி இயக்கத்தை வலுப்படுத்துங்கள் என்று வேண்டுகோள் வைத்தார். அதே வேண்டுகோளை பிக்கியிடம் இப்போது நான் மீண்டும் முன்வைக்கிறேன். சுயசார்பு இந்தியாவை உருவாக்க பிக்கி உறுதுணையாக இருக்க வேண்டும்.
இந்தியாவில் 140 கோடி மக்கள் வசிக்கின்றனர். இதன்மூலம் உலகத்தின் மிகப்பெரிய சந்தையாக நமது நாடு விளங்குகிறது. இந்த வாய்ப்பை இந்திய தொழில் நிறுவனங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சர்வதேச தரத்துக்கு இணையாக உள்நாட்டில் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக அரசு தொழில் நிறுவனங்களின் வரிச் சுமையை கணிசமாக குறைத்திருக்கிறது.
தனிநபர்களின் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் நீங்கள் (தொழிலதிபர்கள்), ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தாதது ஏன்? வரிச்சுமை குறைக்கப்பட்டு இருப்பதால் கூடுதல் ஊழியர்களை பணியில் அமர்த்தாதது ஏன்? இந்த கேள்விகளுக்கு நீங்கள்தான் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆலோசனைகளை வரவேற்கிறேன்
பிக்கி கூட்டத்தில் பிரதமர் மேலும் பேசும்போது, ‘‘இந்திய தொழில் நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. பொருளாதார வளர்ச்சியை மேலும் வேகப்படுத்த தொழில்துறையினரின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வரவேற்கிறேன். இதுதொடர்பாக எவ்வித தயக்கமும் இன்றி எனக்கு நேரடியாக ஆலோசனைகளை அனுப்பலாம்’’ என்றார்.