ஒடிசாவை நோக்கி நகரும் அக்வான் புயல் - 1 லட்சம் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் மக்கள். இடம்: கஞ்சம் மாவட்டம்

பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் மக்கள். இடம்: கஞ்சம் மாவட்டம்

Updated on: 
2 min read

புதுடெல்லி: வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர அக்வான் புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கு கிழக்கே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அக்வான் புயல் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மேற்கு - மத்திய வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள அக்வான் தீவிர புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது. இன்று காலை 11.30 மணி நிலவரப்படி இந்த புயல், ஆந்திரப் பிரதேசத்தின் நர்சாபூருக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 390 கி.மீ. தொலைவிலும், கலிங்கப்பட்டினத்துக்கு தெற்கு - தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு தெற்கே 430 கி.மீ. தொலைவிலும், பூரிக்கு தெற்கே 490 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே 600 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (நவம்பர் 20) நண்பகலுக்குள் நர்சாபூர் மற்றும் பூரிக்கு இடைப்பட்ட பகுதியில் கோபால்பூருக்கு அருகில் கடற்கரையைக் கடக்கக்கூடும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 110 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவின் தெற்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் இருந்து மக்கள் வெளியேற்றம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், ‘ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கோபால்பூர் அமைந்துள்ள கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும், கஜபதி மாவட்டத்தில் சுமார் 16,000 பேரும் கந்தமால் மாவட்டத்தில் 3 ஆயிரம் பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நிலச்சரிவு அபாயம் உள்ளதால் கஞ்சம் மற்றும் கந்தமால் மாவட்டங்களை இணைக்கும் கலிங்கா மற்றும் கஜல்பாடி போன்ற மலைப் பாதை சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேந்திரபாரா, ஜகத்சிங்பூர், பூரி, கஞ்சம், கஜபி, கந்தமால் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை (Red Warning) விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை அடுத்து, கோபால்பூர் துறைமுக அதிகாரிகள் அங்குள்ள இயந்திரங்கள் மற்றும் கப்பல்களை பாதுகாப்பான நிலைக்குக் கொண்டு வந்துள்ளனர்.

ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் அனு கார்க் கூறுகையில், “அக்வான் புயல் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்து சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிற எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில், முதல்வர் மோகன் சரண் மாஜி மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி ஆகியோர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

புயலால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை வெளியேற்றும் பணியை நீர்வளத்துறை தொடங்கியுள்ளது. பொறியாளர்கள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர். மேலும், தொழில்நுட்பக் குழுக்களும் களத்தில் உள்ளனர். ஒரு பெரிய அணையின் இரண்டு மதகுகளும், பல்வேறு நடுத்தர நீர்ப்பாசன அணைகளின் 23 மதகுகளும் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

உணவுப் பொருட்கள், குடிநீர் மற்றும் பாம்பு கடிக்கு எதிரான மருந்துகளை நாங்கள் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துள்ளோம். அவசரகால தேவைகளுக்காக மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.1 கோடி வழங்கியுள்ளது. பேரிடர் காலத்தின்போது கூடுதல் நிதி தேவைப்பட்டால், அதற்கான முன்மொழிவுகளை மாவட்ட ஆட்சியர்கள் அனுப்பலாம் என அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளின்போது பொதுமக்களுக்கோ அல்லது நிர்வாகத்துக்கோ எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாதவாறு எண்ணெய் நிறுவனங்களுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, அக்வான் புயல் நெருங்கி வருவதை கருத்தில் கொண்டு சிலிகா ஏரி, பூரி கடற்கரை, பிதர்கனிகா மற்றும் நந்தன்கானன் உயிரியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மாநில அரசு மூடியுள்ளது. 11 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. மாநில அவசரகால செயல்பாட்டு மையங்களில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

<div class="paragraphs"><p>பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் மக்கள். இடம்: கஞ்சம் மாவட்டம்</p></div>
புஷ்கர் மேளாவில் கவனம் ஈர்க்கும் குதிரைகள் - ரூ.5 லட்சம் முதல் ரூ.23 கோடி வரை விலை?

X