இந்தியா

“நாட்டின் பாரம்பரியத்தை ஏன் அழிக்கிறீர்கள்?” - ராகுலின் மனுஸ்மிருதி கருத்துக்கு யோகி கண்டனம்

மோகன் கணபதி

ரேபரேலி: காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்தியாவின் மரபுகள், பாரம்பரியம் மற்றும் ஜனநாயக நிறுவனங்களை சிதைக்கும் வகையில் கருத்துகளை தொடர்ந்து தெரிவிப்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத், ரூ.879 கோடி மதிப்பிலான 346 வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்தார். மேலும், வீடற்ற குடும்பங்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீட்டு ஆணைகளை அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய யோகி ஆதித்யநாத், “காந்தி குடும்பத்துக்கும், அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கும் இடையேயான உறவு அரசியல் முக்கியத்துவத்துவம் வாய்ந்தது. அந்த குடும்பத்துக்கு, அமேதி மற்றும் ரேபரேலி வாக்காளர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வந்த போதிலும், அந்த குடும்பம் இந்த பகுதிக்கு ஒரு அடையாளச் சிக்கலை உருவாக்கியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இந்தியாவின் மரபுகள், பாரம்பரியம் மற்றும் ஜனநாயக நிறுவனங்களைச் சிதைக்கும் வகையில் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

சமீபத்தில், மகாராஷ்டிராவில் பேசிய அவர், மனுஸ்மிருதியின் கட்டுப்பாடுகளிலிருந்து பெண்கள் விடுபட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

ராகுல் காந்தி மீது தனிப்பட்ட முறையில் நாட்டுக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. சொல்லப்போனால், எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அவரது பங்கு, பொறுப்புணர்வு மிக்கது.

இந்திய அரசியலமைப்பைக் காப்பதாக நீங்கள் (ராகுல் காந்தி) உறுதிமொழி ஏற்றீர்கள். எனினும், இந்தியாவின் மரபுகள் மற்றும் பாரம்பரியத்தை இழிவுபடுத்துவதை உங்கள் பிறப்புரிமையாகக் கருதுகிறீர்கள்.

நீங்கள் மனுவைப் பற்றிப் புரிந்துகொள்ள விரும்பினால், அதர்வ வேதம், சதபத பிராமணம் மற்றும் மத்ஸ்ய புராணம் ஆகியவற்றை படியுங்கள். அதற்கான அனைத்துத் தகவல்களையும் நீங்கள் அதில் காணலாம்.

உத்தரப் பிரதேசத்திற்கு வெளியே செல்லும்போது நீங்கள் மாநிலத்தை இழிவுபடுத்தி அவமதிக்கிறீர்கள்; வெளிநாடுகளுக்குச் செல்லும்போது இந்தியாவையே அவமதிக்கிறீர்கள்.

நாட்டின் தற்போதைய தலைமுறையின் எதிர்காலத்தை ஏன் பாழாக்க விரும்புகிறீர்கள்? இந்தியாவின் பாரம்பரியத்தை ஏன் அழிக்க விரும்புகிறீர்கள்? இந்தியாவின் எதிர்காலத்தை ஏன் ஆபத்துக்குள்ளாக்க விரும்புகிறீர்கள்?

பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் ஆக்கபூர்வமான பங்கை வகிப்பீர்கள் என்று நாடு எதிர்பார்த்தது, ஆனால் நீங்கள் அந்தப் பங்கை வீணடித்து முற்றிலும் கைவிட்டுவிட்டீர்கள். உங்கள் பொறுப்புகளிலிருந்து நீங்கள் முழுமையாக விலகிவிட்டீர்கள்,” என்று குற்றம் சாட்டினார்.

SCROLL FOR NEXT