கே.சி.வேணுகோபால், வி.டி.சதீஷன், ரமேஷ் சென்னிதலா
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதைத் தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.
கேரள மாநில சட்டப் பேரவைக்கு கடந்த ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி(யுடிஎஃப்) 102 இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. கடந்த 2016 முதல் 2010 வரை ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி(எல்டிஎஃப்) 35 இடங்களையும், பாஜக 3 இடங்களையும் கைப்பற்றியது.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவதால் காங்கிரஸ் தொண்டர்கள் படு உற்சாகத்தில் உள்ளனர். இதனிடையே முதல்வர் பதவியில் அமரப் போகும் காங்கிரஸ் தலைவர் யார் என்ற போட்டி காங்கிரஸ் மூத்த தலைவர்களிடையே ஏற்பட்டுள்ளது.
பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், மூத்த தலைவருமான வி.டி.சதீஷன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, மாநிலங்களவை எம்.பி. கே.சி.வேணுகோபால் ஆகியோர் முதல்வர் பதவியை பெறுவதற்கான பந்தயத்தில் உள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் ஆட்சியை அமைப்பதற்கான பணியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும், கேரள மாநில பொறுப்பாளருமான தீபா தாஸ் முன்ஷி உள்ளிட்டோர் திருவனந்தபுரத்தில் முகாமிட்டுள்ளனர்.
அவர்கள் கட்சித் தலைவர்கள், எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் ஒவ்வொரு எம்எல்ஏவை யும் தனித்தனியாக அழைத்துப் பேசவும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐயுஎம்எல்) தலைவர்களையும், மேலிடத் தலைவர்கள் சந்தித்து ஆலோசிக்கவுள்ளனர்.
இதைத் தொடர்ந்து நடைபெறும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், கேரள முதல்வரைத் தேர்வு செய்யும் முடிவை காங்கிரஸ் மேலிடத்துக்கு வழங்கும் தீர்மானம் இயற்றப்படும் என்று மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.
தோல்வி யாரால்? - இதனிடையே எல்டிஎஃப் கூட்டணி தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்த இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். எல்டிஎஃப் அரசில் இருந்த 13 அமைச்சர்கள் தேர்தலில் தோல்வி கண்டுள்ளனர். இதுதொடர்பாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சார்பில் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. மேலும் தோல்விக்குப் பின்னர் பத்திரிகையாளர்களை முதல்வர் பினராயி விஜயன் சந்திக்கவில்லை. விரைவில் அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டியளிப்பார் எனத் தெரிகிறது.