

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் அர்லேகர் ஏற்றுக்கொண்டார். அடுத்த ஆட்சி அமையும் வரை பதவியில் தொடருமாறு ஸ்டாலினை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் கடந்த ஏப்.23-ம் தேதி நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி 73 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், தொடர்ந்து 2-வது முறை ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்து, பிரதான எதிர்க்கட்சியாக மாறியுள்ளது.
இந்நிலையில், முதல்வர் பதவியை மு.க.ஸ்டாலின் நேற்று ராஜினாமா செய்தார். முதல்வர் மற்றும் அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆர்.வி.அர்லேகருக்கு அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை பதவியில் தொடருமாறு ஸ்டாலினை ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.