புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, படகில் ஒரு பெண் மற்றும் சிறுவனுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், அவர்கள் யார் என்று வினவியுள்ளார். அவருடைய இந்தக் கேள்விக்கு காங்கிரஸ் விளக்கம் கொடுத்ததோடு, அந்தக் கேள்விக்காக அவரை கடுமையாக விமர்சித்துள்ளது.
கிரிராஜ் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் ராகுலின் புகைப்படத்தைப் பகிர்ந்து, “இந்தப் புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது ராகுல் ஜி? எப்போது எடுக்கப்பட்டது? உங்களுடன் இருப்பவர்கள் யார் எனத் தெரிந்து கொள்வதில் நான் ஆர்வமாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் எப்போதுமே பாஜகவின் விமர்சனத்துக்கு உள்ளாவது வழக்கம்தான்.
இந்நிலையில் ஜூன், ஜூலை மாதங்களில் ராகுல் மேற்கொண்ட 3 வார வெளிநாட்டுப் பயணமும் பாஜகவின் விமர்சன வளையத்துக்குள் வந்துள்ளது.
கிரிராஜ் சிங் பகிர்ந்துள்ள படம், ராகுல் சமீபத்தில் மேற்கொண்ட பயணத்தில் எடுக்கப்பட்டதா என்பது இன்னும் உறுதியாகவில்லை. அந்தப் படத்தில் ஒரு பெண் தலையில் ஸ்கார்ஃப், கூலர்ஸ் அணிந்தும் தென்படுகிறார். கூடவே ஒரு சிறுவனும் இருக்கிறார். அவர் நீச்சல் உடை அணிந்து கொண்டு ராகுலுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே அமர்ந்துள்ளார்.
காங்கிரஸ் விளக்கம்:
ராகுல் காந்தியின் இந்தப் புகைப்படத்தை வைத்து சலசலப்புகள் எழும் சூழலில், காங்கிரஸ் விளக்கமளித்துள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாதே இது குறித்து, “புகைப்படத்தில் உள்ள பெண், ராகுல் காந்தியின் நண்பரின் மனைவி, அந்தச் சிறுவன் நண்பரின் மகன். அந்தப் புகைப்படத்தில் ராகுலின் நண்பர் இல்லை. அவர்கள் அனைவரும் ஒன்றாக விடுமுறையைக் கொண்டாடினர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ஓர் ஆணும் பெண்ணும் ஒன்றாக இருப்பதைப் பார்த்தாலே இப்படியான தீய எண்ணங்கள் தான் உங்களைப் போன்றோருக்கு எழும்” என்று கிரிராஜ் சிங்கை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதற்கிடையில் அயலக காங்கிரஸ் சமூக ஊடக பொறுப்பாளர் அவி தாண்டியா, “இந்தப் புகைப்படம் டெக்சாஸ் நகரின் ரே ராபர்ட்ஸ் ஏரியில் எடுக்கப்பட்டது. இது உண்மைதானா என்பதை நீங்கள் ஆய்வு செய்து கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.
பாஜக எழுப்பும் சந்தேகம்:
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு வெகு சில நாட்களுக்கு முன்னரே ராகுல் காந்தி வெளிநாட்டுப் பயணம் முடித்து நாடு திரும்பியதால், அது பற்றி பாஜக பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பி வருகிறது.
கடந்த மாதம் பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியா பகிர்ந்த எக்ஸ் பதிவில், “ஜூன் 22 முதல் ஜூலை 13 வரையிலான ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணம் மர்மமானதாகவே இருக்கிறது. அவர் எங்கு சென்றார்? யாரை சந்தித்தார்? அவருடைய பயணம், தங்குமிடச் செலவுகளை செய்தது யார்?” என்று வினவியிருந்தார்.
மேலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் அயலக தொடர்புகள், “சந்திப்புகள் அவருடைய அரசியல், அல்லது உத்தி ரீதியிலான விருப்பங்களில் ஏதேனும் தாக்கத்தை செலுத்துகிறதா என சந்தேகமாக இருக்கிறது,” என்றும் அமித் மாள்வியா கூறியிருந்தார்.
அதேபோல், மும்பை பாஜக தலைவர் அமீத் சடாம், “வெளிநாட்டுப் பயணங்களின்போது ராகுல் காந்தி இந்தியாவின் எதிரிகளை சந்தித்தார். திரும்பியதும் நாட்டில் குழப்பம் விளைவிக்க முடிவு செய்தே வந்தார்” என்று விமர்சித்துள்ளார்.
முன்னதாக பாஜக ராகுலின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிய புள்ளிவிவரம் ஒன்றையும் வெளியிட்டது. அதில் ராகுல் காந்தி, “லண்டன், நியூயார்க், இத்தாலி, ஜெர்மணி, கத்தார், வியட்நாம், கம்போடியா, மாலத்தீவு, துபாய் உள்ளிட 54 வெளிநாட்டுப் பயணங்களை ராகுல் மேற்கொண்டார். ஓமனுக்கு ஒருமுறை ரகசியமாகவும் சென்றுவந்தார் என்று கூறியுள்ளது.
அதுமட்டுமல்லாது ராகுல் காந்தியின் அறிவிக்கப்பட்ட சொத்து மதிப்புக்கும் அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் திகழ்கிறது. வெளிநாட்டுப் பயணங்களுக்காக ராகுல் காந்தி ரூ.60 கோடி செலவழித்துள்ளார் என்றும் பாஜக கூறுகிறது.