

புதுடெல்லி: இந்தியாவில் தற்போதைய காகித நோட்டுகளுக்குப் பதிலாக, பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பு கொண்ட தலா 100 கோடி எண்ணிக்கையிலான பாலிமர் நோட்டுகளை அச்சிட்டு களச் சோதனைக்கு உட்படுத்த அரசு அனுமதியளித்துள்ளதாக மாநிலங்களவையில் அளித்த எழுத்துபூர்வமான பதிலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் மாநிலங்களவைக்கு அளித்த அந்தப் பதிலில், “இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது மத்திய வாரியத்தின் பரிந்துரையின்பேரில், 1934-ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் 25-ம் பிரிவின்படி, களச் சோதனைகளுக்காக தலா 100 கோடி ரூபாய் 10 மற்றும் ரூபாய் 20 பாலிமர் நோட்டுகளை அறிமுகப்படுத்தவும், களச் சோதனைகள் வெற்றிகரமாக முடிந்த பிறகு இந்த இரண்டு மதிப்புகளிலும் பாலிமர் நோட்டுகளை புழக்கத்தில் விடவும் அரசுக்கு ஒரு முன்மொழிவை அனுப்பியிருந்தது.
அதற்கு அரசு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது. ஆர்பிஐ தகவலின்படி இந்த பாலிமர் நோட்டுகள் ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள காகிதத்திலான ரூபாய் நோட்டுகளுடன் பயன்பாட்டில் இருக்கும்.
மேலும், இதற்கான மூலப்பொருள் கொள்முதல் ஆரம்ப நிலையில் இருக்கிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே இப்போதைக்கு, பாலிமர் நோட்டுகள் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற கால நேரத்தை குறிப்பிட்டுச் சொல்ல இயலாது” என்று தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் நோட்டுகளைத் தயாரிக்கத் தேவையான பிரத்யேக தாள்களை வழங்க, உலகளாவிய நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியின் நோட்டு அச்சிடும் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இந்தத் தாள்களை வழங்க விண்ணப்பிக்க ஆகஸ்ட் 18 கடைசி நாளாகும். சாதாரண காகித நோட்டுகளை விட பிளாஸ்டிக் நோட்டுகள் நீண்ட காலம் உழைக்கும். இவை தண்ணீர், அழுக்கு அல்லது எண்ணெயால் எளிதில் பாழாகாது.
மேலும், இவற்றை நகல் எடுப்பது மிகக் கடினம் என்பதால், கள்ள நோட்டுப் புழக்கத்தை முற்றிலுமாகத் தடுக்க முடியும். ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே இந்த முறையைப் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் சீதாராமன், “நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) மூலம் அளவிடப்படும் சராசரி சில்லறை பணவீக்கமானது, 2023-24ல் 5.4 சதவீதத்திலிருந்து 2024-25ல் 4.6 சதவீதமாகவும், மேலும் 2025-26ல் 2.1 சதவீதமாகவும் சீராகக் குறைந்துள்ளது” என்று கூறினார்.
அதேவேளையில், “மேற்கு ஆசிய நெருக்கடியால் ஏற்பட்ட விலையேற்றம் மற்றும் சர்வதேச அளவில் எகிறிய எரிசக்தி விலை, பருவகாலத்துக்கு ஏற்ப மாறிய காய்கறி விலைகள் மற்றும் எல் நினோ தாக்கம் ஆகியவற்றின் காரணமாக, 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் சில்லறைப் பணவீக்கம் 3.9 சதவீதமாக உயர்ந்துள்ளது” என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இருப்பினும், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 4%-க்கு கீழ் இருக்கிறது என்றும் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டியுள்ளார்.