புதுடெல்லி: கட்சியின் மூத்த தலைவர்கள், மாநிலத் தலைவர்களுடன் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கேரள மாநிலத்தில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில் நேற்று டெல்லியில் கட்சியின் தேசியத் தலைவர் கார்கே தலைமையில் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர்கள் பிரியங்கா காந்தி வதேரா, கே.சி.வேணு கோபால், ஜெய் ராம் ரமேஷ், பூபேஷ் பாகேல், மூத்த நிர்வாகிகள், கட்சியின் மாநிலப் பிரிவுத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தின் போது கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், அரசியல் போராட்டங்களில் ஈடுபடுதல், கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது: பண வீக்கம், வேலையின்மை, தேர்வு முறைகேடுகள் மற்றும் சமூக ஏற்றத் தாழ்வு போன்ற கடுமையான சவால்களை நாடு எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வு மற்றும் பல்வேறு பணி நியமனத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு, கல்வி அமைப்பு தொடர்பான சர்ச்சைகள் ஆகியவை லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நம்பிக்கையை உலுக்கியுள்ளன.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களைத் தனிப்பட்ட முறையில் சந்தித்த கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அவர்களுடன் நிற்பதாக உறுதி அளித்துள்ளார். நீட் தேர்வு, பணி நியமனத் தேர்வு விவகாரங்களில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும். துரதிர்ஷ்டவசமாக, பல தசாப் தங்களாகக் கட்டமைக்கப்பட்ட நிறுவனங்களும் அமைப்புகளும் இன்று திட்டமிட்டு பல வீனப்படுத்தப் படுகின்றன.
எனவே, அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பது மட்டுமல்லாமல், இந்தியாவின் அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் சமூக நீதியைப் பாதுகாப்பதும் நமது பொறுப்பாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் மீனாட்சி நடராஜன் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.