படம்: மெட்டா ஏஐ

 
இந்தியா

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: முக்கிய அம்சங்கள் என்னென்ன? - ஒரு பார்வை

போத்தி ராஜ்.க

வேகம் என்பது வெறும் பயண நேர சுருக்கத்துக்கான அர்த்தம் மட்டும் இல்லை; அது சர்வதேச அரங்கில் ஒரு தேசம் நிமிர்ந்து நிற்கும் கம்பீரத்தின் அடையாளம்.

உலகப் பொருளாதாரத்தில் வல்லரசாக இந்தியா மாறிவரும் வேளையில், நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளும் அதே அதிவேகத்தில் பயணிக்கிறது.

ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்பங்களை வியப்போடு பார்த்து வந்த இந்தியா, இன்று தனது மண்ணில், சொந்தத் தயாரிப்பில் ‘B28’ புல்லட் ரயிலை உருவாக்கி உலகை வியக்க வைத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ (Viksit Bharat) மற்றும் ‘மேக் இன் இந்தியா’ என்ற அசைக்க முடியாத தொலைநோக்குப் பார்வையால் இத்திட்டம் சாத்தியமாகியுள்ளது.

இந்திய ரயில்வேயின் 170 ஆண்டு கால வரலாற்றில் ஒரு புதிய சகாப்தமாக, மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் 557 பயணிகளுடன் நிலத்திலும் கடல் அடியிலும் இந்த புல்லட் ரயில் சீறிப் பாயக் காத்திருக்கிறது.

ஜப்பானிய ஷிங்கன்சென் (Shinkansen) தொழில்நுட்பத்தின் உதவியோடு, பெங்களூரு BEML (Bharat Earth Movers Limited) தொழிற்சாலையில் முழுக்க முழுக்க இந்தியப் பொறியாளர்களால் இந்த புல்லட் ரயில் உருவாக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்திலான வசதிகள், இணையற்ற பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்தும் இந்தியாவை உலக அதிவேக ரயில் தயாரிக்கும் நாடுகளின் உயரடுக்கு வரிசையில் (Elite League) கொண்டு சேர்த்துள்ளன.

திட்டத்தின் பின்னணியும் நிதியுதவியும்:

கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இத்திட்டம் தொடங்கப்பட்டது. 2017 செப்டம்பர் 14 அன்று அகமதாபாத்தில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பிலான இத்திட்டத்துக்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு கழகம் (JICA) 81 சதவீதம் நிதியை 0.1 சதவீத குறைந்த வட்டியில் கடனாக வழங்கியுள்ளது.

மீதமுள்ள தொகையை ரயில்வே அமைச்சகமும், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில அரசுகளும் பங்குகளாகப் பகிர்ந்து கொள்கின்றன. தேசிய அதிவேக ரயில் கழகம் (NHSRCL) இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

சோதனை ஓட்டம் மற்றும் சேவை காலக்கெடு:

2027-ம் ஆண்டு மே - ஜூன் மாதங்களில் B28 ரயிலின் முதற்கட்ட சோதனை ஓட்டம் மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, 2027 ஆகஸ்ட் சுதந்திர தினத்தை இலக்காகக் கொண்டு சூரத் - பிலிமோரா முதல் வாபி வரை சுமார் 50 - 100 கி.மீ. வழித்தடம் முதல்கட்ட சேவை பயன்பாட்டுக்கு வரும். முழுமையான மும்பை - அகமதாபாத் 508.17 கி.மீ. வழித்தடம் 2029 - 2030-க்குள் பயன்பாட்டுக்கு வரும். இதற்காக J-Slab Standard Gauge தொழில்நுட்பத்தில் 21 கி.மீ. நிலத்தடிப் பாதையும், 7 கி.மீ. கடலடிச் சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டு வருகின்றன.

கர்நாடகாவில் தயாராகும் புல்லட் ரயில்:

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள BEML தொழிற்சாலையில் இந்த புல்லட் ரயில் தயாரிக்கப்படுகிறது  BEML நிறுவனம், சென்னை ஐசிஎப் (ICF) தொழிற்சாலையுடன் இணைந்து B28 ரயில்களைத் தயாரித்து வருகிறது. தற்போது முதலாவது ரயில் மாதிரிகள் சோதனை ஓட்டத்திற்குத் தயாராகி வருகின்றன.

ஷிங்கன்சென் தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்கள்:

ஜப்பானிய தொழில்நுட்பமான ஷிங்கன்சென் ரயில்கள் வழக்கமான ரயில் பாதைகளில் இயங்குவதில்லை. லெவல் கிராஸிங் மற்றும் பிற சரக்கு, பயணிகள் ரயில்களின் குறுக்கீடுகள் இல்லாத தனிப்பாதையில் (Standard Gauge) மட்டுமே இயங்குகின்றன.

ஏரோடைனமிக் வடிவமைப்பு:

காற்று அழுத்தத்தைக் குறைக்கும் நீண்ட மூக்கு வடிவ அமைப்பில் ரயில் இருக்கும்.

நிலநடுக்க எச்சரிக்கை:

P-waves உணர்ந்த நொடியில் மின்சாரத்தைத் துண்டித்து அவசரகால பிரேக் போடும் தொழில்நுட்பம்.

கணினி கட்டுப்பாடு (ATC):

நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட வேகம் அதிகமானால் தானாகவே கட்டுப்படுத்தும் கருவி.

அதிநவீன சிக்னல்:

ஓட்டுநரின் அறையிலேயே திரையில் தோன்றும் ETCS Level-2 சிக்னல் முறை.

போல்ஸ்டர்லெஸ் போகீஸ்:

அதிர்வுகளைக் குறைத்து ரயில் தடம்புரள்வதைத் தடுக்கும் சக்கரக் கட்டமைப்பு.

புல்லட் ரயிலின் சிறப்பு அம்சங்கள்:

>'B28' புல்லட் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செலுத்த முடியும். இயக்கத்தின்போது மணிக்கு 249 - 250 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும்.

> இந்த ரயிலில் மொத்தம் 8 பெட்டிகள் பொருத்தப்படும் (7 வழக்கமான பெட்டிகள் + 1 எக்ஸிகியூட்டிவ் வகை பெட்டி). வழக்கமான பெட்டியில் 3+2 எனவும், எக்ஸிகியூட்டிவ் பெட்டியில் 2+2 எனவும் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

> இதில் மொத்தம் 557 பயணிகள் வரை பயணிக்க முடியும். மாற்றுத்திறனாளிகளுக்கென தனியாக இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

> இந்த ரயில் மொத்தம் 202 மீட்டர் நீளம் உடையதாக இருக்கும். 4 மோட்டார் கார்களும், 4 டிரெய்லர் கார்களும் பொருத்தப்பட்டிருக்கும்.

> பயணிகள் வழித்தடம் முழுவதையும் அறிந்து கொள்ளும் வகையில் இருக்கையின் முன்பகுதியில் எல்சிடி (LCD) திரையில் ஆங்கிலம், இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் தகவல்கள் தெரிவிக்கப்படும்.

> ஏதேனும் அவசர சூழல் அல்லது பயணிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால், நேரடியாக ஓட்டுநரைத் தொடர்பு கொண்டு பேசும் வசதி செய்யப்பட்டுள்ளது.

> ரயில் முழுவதும் வைஃபை (Wi-Fi) இணைய வசதி செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் பொழுதுபோக்கு அம்சங்களைப் பயன்படுத்தலாம்.

> மாற்றுத்திறனாளிகள் எளிதாக ஏறும் வகையில் சாய்வு தளங்களும், அவர்களுக்கென பிரத்யேகக் கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

> வெளியே எவ்வளவு வெப்பம், மழை, பனி இருந்தாலும், பயணிகளுக்கு ஏற்றவாறு இதமான சூழலைப் பராமரிக்க ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

> ரயில் முழுவதும் எல்இடி (LED) விளக்குகளும், ஒவ்வொரு இருக்கையிலும் லேப்டாப் மற்றும் கைபேசி சார்ஜ் செய்யும் வசதியும் உண்டு.

> எக்ஸிகியூட்டிவ் பெட்டியில், பயணிகள் தங்களின் பயண திசைக்கு ஏற்ப அல்லது உடன் வருபவர்களுடன் முகாமுகமாக அமர்ந்து பேசும் வகையில் இருக்கைகளை 360 டிகிரி சுழற்றிக் கொள்ள முடியும்.

டிக்கெட் கட்டணம்:

மும்பை - அகமதாபாத் இடையே சாதாரண வகுப்பில் பயணிப்பவருக்கு ரூ.2,500 முதல் ரூ.3,000 வரையிலும், எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் ரூ.4,500 முதல் ரூ.6,000 வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்படலாம். இடைப்பட்ட நகரங்களுக்கான பயணக் கட்டணம் ரூ.250 முதல் தொடங்கும். மாணவர்களுக்கான சீசன் பாஸ் மற்றும் டைனமிக் ப்ரைசிங் முறைகளும் பரிசீலனையில் உள்ளன.

'B28' புல்லட் ரயில் திட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் உறுதியான தொலைநோக்குப் பார்வைக்கும், 'வளர்ச்சியடைந்த இந்தியா' (Viksit Bharat) என்ற  பயணத்தின் நம்பிக்கை சான்றாகும்.

தடைகளைத் தாண்டி இலக்குகளை எட்டும் அரசின் இந்த உள்கட்டமைப்புப் புரட்சி, ஒவ்வொரு இந்தியனின் அதிவேகப் பயணக் கனவையும் நனவாக்கியுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT