மும்பை: மும்பையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் குட்டியை மீட்பு குழுவினர் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த திமிங்கலம் குட்டி இறுதியில் இறந்தது.
மும்பையின் பாந்த்ரா கடலோர பகுதியில் அமைந்துள்ள கார்டர் கிளப் அருகே ஒரு திமிங்கலம் தென்படுவதை பாந்த்ரா-வெர்சோவா கடல் பாலம் அமைக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கடந்த சனிக்கிழமை பார்த்தனர். அது பின்னர் கரை ஒதுங்கிய நிலையில் அசைந்து கொண்டிருந்தது. அது 26 அடி நீளம் கொண்ட ‘ஹம்ப்பேக்’ வகை திமிங்கலம் குட்டி என கண்டறிப்பட்டது.
இதையடுத்து வனத்துறை, மும்பை மாநகராட்சி, தீயணைப்புத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் குழுவினர் ஆகியோர் விரைந்து வந்து அதை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் முயற்சியில் இறங்கினர்.
ஆனால் இறுதியில் அந்த திமிங்கலம் குட்டியிடம் எந்த அசைவும் இல்லை. அதை வனத்துறையினரும், உள்ளூர் மீனவர்களும் பரிசோதித்ததில் அந்த திமிங்கலம் குட்டி இறந்தது உறுதி செய்யப்பட்டது. திமிங்கலம் குட்டியை காப்பாற்றும் மீட்பு குழுவினரின் முயற்சி சோகத்தில் முடிந்தது.
ஹம்ப்பேக் (கூன் முதுகு) வகை திமிங்கலங்கள் உலகின் மிகப் பெரிய பாலூட்டி விலங்கினம். இவற்றில் நன்கு வளர்ந்த திமிங்கலம் 50 அடி முதல் 60 அடி நீளம் இருக்கும்.
இந்த வகை திமிங்கலம் மும்பை கடல் பகுதியில் தென்படுவது மிகவும் அரிது. இவை இடம்பெயரும் போது அரபிக் கடல் வழியாக செல்லும் என கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்னர். கூட்டமாக இடம் பெயரும்போது தாயைவிட்டு பிரிந்த திமிங்கலம் குட்டி உடல் நலம் பாதிக்கப்பட்டோ, காயம் அடைந்தோ அல்லது கடல் கொந்தளிப்பு காரணமாக பாதை மாறி கரை ஒதுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.