புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தின் முதல்கட்ட வாக்குப்பதிவு, திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) மற்றும் பாஜகவுக்கு பெரும் சவாலாகி விட்டது. 152 தொகுதிகளில் கடந்த காலத் தேர்தல்களில் பல உயிர்கள் பலியாகி உள்ளன.
கடந்த காலத் தேர்தல் முடிவுகள், வன்முறைச் சம்பவங்களின் வரலாறு மற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவை இந்தத் தேர்தல் கட்டத்தை மிகவும் முக்கியமானதாக மாற்றியுள்ளன. முதல் கட்டத் தேர்தலின் புள்ளிவிவரக் கணக்குகள், இந்தப் போட்டியை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றுகின்றன.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, முதல் கட்டத்தின் 152 தொகுதிகளில் பாஜக 59 இடங்களைக் கைப்பற்றியது. இரண்டாம் கட்டத்தில் அமைந்த 142 தொகுதிகளில் அதன் வெற்றி எண்ணிக்கை வெறும் 18-ஆகக் குறைந்தது.
பாஜகவைப் பொறுத்தவரை, தன் வெற்றிப் பயணத்தில், முதல் கட்டத்திலேயே முன்னிலையைப் பெறுவது மிக அவசியமாகும். இந்த முதல் கட்டத்தில் அதன் பலம் குறைந்தால், அடுத்த கட்டம் மிகவும் கடினமானதாக அமையும்.
மறுபுறம், மம்தா பானர்ஜியின் டிஎம்சியும் சற்றும் குறைவில்லாத சவாலை எதிர்கொண்டுள்ளது. 2021 தேர்தலில், முதல் கட்டத்தில் அமைந்த 152 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 92 இடங்களை வென்றது.
அதேவேளையில், இரண்டாம் கட்டத்தில் அமைந்த 142 தொகுதிகளில் 123 இடங்களைக் கைப்பற்றியது. முதல் கட்டத்திலேயே பாஜகவின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த டிஎம்சியால் முடிந்தால், அது மம்தா பானர்ஜியை நான்காவது முறையாக முதலமைச்சர் பதவியில் அமர்த்தும். 2011 முதல் 2024 வரையிலான தேர்தல் தரவுகளின்படி, இந்த 152 தொகுதிகளில் பாஜகவின் வளர்ச்சி வரைபடம் உயர்ந்துள்ளதைக் காண முடிகிறது. 2011 தேர்தலில், பாஜகவால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற இயலவில்லை.
2016 தேர்தலில், இந்த வெற்றி எண்ணிக்கை வெறும் மூன்றாக உயர்ந்தது. இருப்பினும், 2019 மக்களவைத் தேர்தலில், இதே தொகுதிகளில் பாஜக 86 இடங்களைக் கைப்பற்றிப் பெரும் முன்னேற்றம் கண்டது.
தொடர்ந்து, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், அத்தொகுதிகளில் பாஜக 59 இடங்களை வென்றது. அதன் தொடர்ச்சியாக, 2024 மக்களவைத் தேர்தல்களில் இக்கட்சி 64 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இதனாலேயே, அமித் ஷா தலைமையிலான இக்கட்சி, இக்கட்டத் தேர்தலின் மீது தனது முழு பலத்தையும் காட்டியுள்ளது.
இருப்பினும், டிஎம்சியின் செயல்பாடுகளும் சற்றும் சளைத்தவை அல்ல. 2011-இல் 68 தொகுதிகளையும், 2016-இல் 86 தொகுதிகளையும் வென்ற டிஎம்சி, 2019 மக்களவைத் தேர்தல்களில் 57 தொகுதிகளில் முன்னிலை பெற்றது.
2021-இல் 92 தொகுதிகளை வென்றதன் மூலமும், 2024 மக்களவைத் தேர்தல்களில் 76 தொகுதிகளில் முன்னிலை பெற்றதன் மூலமும் டிஎம்சி ஒரு வலுவான நிலையைப் பதிவு செய்தது. 2019-ல் ஒரு பின்னடைவைச் சந்தித்திருந்தாலும், மரபு ரீதியாகவே முதல்கட்டத் தேர்தலின் தொகுதிகள் டிஎம்சிக்கு சாதகமானவையே.
முதல் கட்டத் தேர்தலில் அடங்கியுள்ள தொகுதிகளில், மக்கள் தொகையில் 50 முதல் 66 சதவீதம் வரை முஸ்லிம்கள் வசிக்கும் முர்ஷிதாபாத், மால்டா மற்றும் வடக்கு தினாஜ்பூர் போன்ற மாவட்டங்கள் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
இம்மூன்று மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளில், கடந்த முறை டிஎம்சி 35 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் கைப்பற்றியிருந்தன. இம்முறை, இந்து வாக்குகளைத் துருவப்படுத்துவதில் கவனம் செலுத்தி, டிஎம்சியைத் தகர்க்கும் வகையில் பாஜக தனது தேர்தல் வியூகத்தை வகுத்துள்ளது.
தேர்தலுக்கு முந்தைய சூழலும் பதற்றமான நிலையிலேயே காணப்பட்டது. துர்காபூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில், பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல்கள் வெடித்தன.
மேற்கு வங்க மாநிலத்தின் தேர்தல் கால வன்முறை வரலாறு குறித்த கவலைகளும் தற்போது எழுந்துள்ளன. 2019 மக்களவைத் தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் 15 பேர் உயிரிழந்ததுடன், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 1,300 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின. இதில் 17 உயிர்கள் பலியாகின. 2023 பஞ்சாயத்துத் தேர்தலின்போது 45 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 18 பேர் வாக்குப்பதிவு நாளன்று மட்டுமே உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலிலும் 10 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இத்தகைய பின்னணியில், இம்முறை தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்பையும் கட்டுப்பாடுகளையும் மேலும் கடுமையாக்கியுள்ளது.
வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே தொடங்கி, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இருசக்கர வாகனப் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மட்டுமே இருசக்கர வாகனத்தில் சென்று வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
மது விற்பனைக்கான தடைக்காலம், 48 மணி நேரத்திலிருந்து 96 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
மத்தியப் படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டிருப்பது தேர்தல் சூழலைப் பாதிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனினும், அம்மாநிலத்தில் நிலவும் வன்முறைச் சூழலைக் கருத்தில் கொண்டு இத்தகைய கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியமென பாஜக தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு நாளன்று எவ்விதக் குழப்பமும் ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில், சுமார் 800 டிஎம்சி தலைவர்களின் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இயல்பான சூழலில் எவரையும் கைது செய்யுமாறு எவ்வித அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை எனத் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக இன்றைய முதல்கட்ட வாக்குப்பதிவும் பாஜக மற்றும் டிஎம்சி ஆகிய இரு கட்சிகளுக்குமே மிக முக்கியமானதாகிறது.