இந்தியா

மே.வங்கத்தில் கடும் போட்டியா.. தெளிவான வெற்றியா.. என்ன சொல்கிறது கடந்த 2 தேர்தல் முடிவுகள்?

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்க தேர்​தலில் ஆளும் திரிண​மூல் காங்​கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி இருக்​குமா அல்​லது ஒரு கட்​சிக்கு தெளி​வான வெற்றி கிடைக்​குமா என்ற கேள்வி எழுந்​துள்​ளது.

மேற்கு வங்​கத்​தில் 7 கோடிக்​கும் அதி​க​மான வாக்​காளர்​கள் உள்​ளனர். இதில் தொடர்ந்து 3 முறை ஆட்சி செய்து வரும் மம்தா பானர்ஜி தலை​மையி​லான திரிண​மூல் காங்​கிரஸ் (டிஎம்​சி) 4-வது முறை​யாக ஆட்​சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வரு​கிறது. கடந்த 2021 தேர்​தலில் கணிச​மான இடங்​களு​டன் 2-ம் இடம் பிடித்த பாஜக இந்த முறை ஆட்​சி​யைப் பிடிக்க தீவிர​மாக பணி​யாற்றி வரு​கிறது. இதனால் அங்கு இரு கட்​சிகளுக்​கும் இடையே நேரடிப் போட்டி நில​வு​கிறது.

          

தேர்​தல் பிரச்​சா​ரங்​கள் தொடங்​கி​யுள்ள நிலை​யில், ஒரு முக்​கிய​மான கேள்வி எழுந்​துள்​ளது. இந்த தேர்​தல் எவ்​வளவு தெளி​வான​தாக இருக்​கும்? கடந்த கால தேர்​தல்​களில் வெற்​றிக்​கான வாக்கு வித்​தி​யாசத்தை அலசும் போது பல்​வேறு விவரங்​கள் தெரிய வரு​கின்​றன. கடந்த 2016 மற்​றும் 2021 தேர்​தல் முடிவு​களை ஒப்​பிடும் போது, தொகு​தி​கள் கைப்​பற்​றப்​பட்ட விதத்​தில் தெளி​வான மாற்​றம் தெரி​கிறது.

2016-ல், பெரும்​பாலான வெற்றி நடுத்தர அளவி​லான வாக்கு வித்​தி​யாசத்​திலேயே இருந்​தன. சுமார் 74 சதவீத இடங்​களில் (219 தொகு​தி​கள்) வாக்கு வித்​தி​யாசம் 5,000 முதல் 25,000 வாக்​கு​களாக இருந்​தன. 25,000-க்கு மேல் வாக்கு வித்​தி​யாசம் இருந்த இடங்​கள் 98 (33 சதவீதம்) மட்​டுமே இருந்​தன.

இந்த வித்​தி​யாசம் 2021 தேர்​தலில் மாறியது. 25,000-க்​கும் அதி​க​மான வாக்கு வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தொகு​தி​களின் எண்​ணிக்கை 132-ஆக (44 சதவீதம்) உயர்ந்​தது. எனினும், 10,000 முதல் 25,000 வாக்கு வித்​தி​யாசத்​தில் வென்ற தொகு​தி​கள் 121-ல் இருந்து 98-ஆகக் குறைந்​தன. மிகக் குறைந்த வாக்கு வித்​தி​யாசத்​தில் (1,000-க்​கும் குறைவு) வெற்றி பெற்​றவை வெறும் 7 தொகு​தி​கள் மட்​டுமே.

மேற்கு வங்க தேர்​தல்​கள் எவ்​வாறு அதிக தெளி​வான​தாக மாறி வரு​கின்றன என்​பதை இது சுட்​டிக்​காட்​டு​கிறது. கடும் போட்​டிகளை விட, தெளி​வான வாக்கு வித்​தி​யாசத்​துடன் அதிக தொகு​தி​கள் கைப்​பற்​றப்​படு​கின்​றன. பெரிய வாக்கு வித்​தி​யாசத்தை நோக்​கிய இந்த மாற்​றம், பா.ஜ.க-வை விட டிஎம்​சிக்கு அதிக பலன் அளித்​துள்​ளது. 2021-ல், டிஎம்சி 25,000-க்​கும் அதி​க​மான வாக்கு வித்​தி​யாசத்​தில் 118 இடங்​களை வென்​றது, அதே​நேரம் பா.ஜ.க இந்த பிரி​வில் 13 இடங்​களை மட்​டுமே வென்​றது. 10,000-க்​கும் குறை​வான மற்​றும் 10,000 முதல் 25,000 வரையி​லான வாக்கு வித்​தி​யாசங்​களில் பாஜக தனது எண்​ணிக்​கையை அதி​கரித்​துள்​ளது.

பாஜக தனது செல்​வாக்கை விரிவுபடுத்தி இருந்​தா​லும், பல தொகு​தி​களில் டிஎம்சி வலு​வான மற்​றும் தெளி​வான வாக்​காளர் ஆதர​வைப் பெற்​றுள்​ளதை 2021 தேர்​தல் முடிவு காட்​டு​கிறது. ஒட்​டுமொத்​த​மாக வாக்கு வித்​தி​யாசங்​கள் அதி​கரித்த போதி​லும், சில தொகு​தி​களில் கடும் போட்டி நில​வியது. 2021-ல் பலராம்​பூர், தின்​ஹாட்​டா, காட்​யால், குல்​டி, தந்​தன், தம்​லுக், ஜல்​பைகுரி ஆகிய 7 தொகு​தி​களில் மட்​டுமே 1,000-க்​கும் குறை​வான வாக்கு வித்​தி​யாசத்​தில் முடிவு​கள் அமைந்​தன. இதில் பாஜக 4 இடங்​களை​யும், டிஎம்சி 3 இடங்​களை​யும் வென்​றன.

கடந்த 2 தேர்​தல்​களின் தரவு​கள், மேற்கு வங்​கம் அதிக தெளி​வான முடிவு​களை நோக்கி நகர்​வதைக் காட்​டு​கின்​றன. 2026 தேர்​தல் நெருங்​கும் வேளை​யில், இதே போன்ற சூழல் தொடருமா அல்​லது மீண்​டும் கடும்​ போட்​டி அதி​கரிக்​கு​மா என்​பது மே 4-ம்​ தேதி வாக்​கு எண்​ணிக்​கை​யின்​ ​போது தெரிய வரும்​.

SCROLL FOR NEXT