மேற்கு வங்க பாஜக எம்எல்ஏ பாபியா அதிகாரி

 
இந்தியா

‘பாட்டாசு வெடிப்பதன் நன்மை யாதெனில்...’ - மேற்கு வங்க பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தீபாவளி பட்டாசுகள் பல நோய்களைக் குணப்படுத்துவதாக மேற்கு வங்க பாஜக எம்எல்ஏ பாபியா அதிகாரி கூறியுள்ள கருத்து அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தீபாவளி கொண்டாட்டத்துக்கு பின்னர் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறம் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் காற்று மாசு மோசமடைந்துள்ளது. இப்பிரச்சனையில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் இருந்தும், அவை பல இடங்களில் அப்பட்டமாக மீறப்படுவதாகவும் புகார்கள் உள்ளன.

இந்நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆளும் பாஜகவின் டோலிகஞ்ச் தொகுதி எம்எல்ஏ பாபியா கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்ற காளி பூஜையின்போது, “காளி பூஜை பட்டாசுகள் இல்லாமல் முழுமையடையாது என்று நமது முதல்வர் ஏற்கெனவே கூறியுள்ளார். எனவே பட்டாசுகள் நிச்சயமாக வெடிக்க வேண்டும்.

இருப்பினும், உள்ளூர் காவல் நிலையங்கள் வழங்கிய அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றியே நாங்கள் பட்டாசுகளை வெடிப்போம்.

அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளுக்குத் தடை விதிக்கப்பட வேண்டும். பட்டாசுகளை வெடிப்பது பல நோய்களைத் தடுக்க உதவுகிறது என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்தக் கருத்து தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகியும் வருகிறது.

இதனிடையே, தீபாவளிக்காக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த பிறகும், தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால், அங்கு காற்று மாசு கணிசமாக அதிகரித்துள்ளது.

மக்கள் காலையில் எழுந்தபோது, நகரம் முழுவதும் புகைமூட்டத்தால் சூழப்பட்டிருந்தது. சாலைகளில் பார்வைத்திறன் குறைந்ததோடு, மக்களின் கண்கள் மற்றும் தொண்டையில் எரிச்சல் உணரப்பட்டது.

அதே சமயம், மும்பையில் காற்றின் தரம் கடந்த ஆண்டை விடச் சிறப்பாக இருந்தது. மாலை நேரம் நெருங்கியதும், பட்டாசுகளிலிருந்து வெளியேறிய புகையினால் மாசுபாடு அதிகரித்தது. பகல் நேரத்தில் தெளிவாக இருந்த காற்று, மாலை வேளையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் விரைவாக மோசமடைந்தது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT