இந்தியாவில் ‘காற்று மாசு’ மரணங்களை மறைக்கிறது மோடி அரசு: ஆய்வறிக்கையை முன்வைத்து காங். சாடல்

இடம்: டெல்லி

இடம்: டெல்லி

படம்: சுஷில் குமார் வர்மா

Updated on: 
1 min read

புதுடெல்லி: 2023-ல் நிகழ்ந்த உயிரிழப்புகளில் சுமார் 20 லட்சம் உயிரிழப்புகள் காற்று மாசு காரணமாகவே ஏற்பட்டதாக ஃபிக்கி - இஒய் (FICCI-EY) ஆய்வு அறிக்கை தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதவில், ‘நாட்டில் காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த உண்மையை ஒப்புக்கொள்ள மோடி அரசு நீண்டகாலமாகவே மறுத்து வருகிறது.

காற்று மாசுபாடு குறித்த பல ஆய்வுகளை, அவை இந்தியாவுக்கான பிரத்யேக ஆய்வுகள் அல்ல என்றும், அதன் பாதிப்புகள் நேரடியானவை அல்ல என்றும், காற்று மாசுபாட்டினால் மட்டுமே ஏற்பட்டவை என்று உறுதியாகக் கூற முடியாது என்றும் நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் மோடி அரசு மறுத்து வருகிறது.

தற்போது ஃபிக்கி - இஒய் அமைப்பின் விரிவான ஆய்வு அறிக்கை, 2023-ல் நிகழ்ந்த 20 லட்சம் மரணங்களுக்கு காற்று மாசுபாடுதான் காரணம் என்று திட்டவட்டமாகக் கூறுகிறது. மொத்த உயிரிழப்புகளில் இது 22%. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மோடி அரசுக்கு விடுக்கப்பட்ட மற்றொரு எச்சரிக்கை இது.

எளிதாக வணிகம் செய்வதற்கான நடவடிக்கைகள் முக்கியமானவைதான். ஆனால், எளிதாக சுவாசிப்பதற்கு ஏற்ற சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் அதைவிட மிக முக்கியமான, அடிப்படையான ஒன்று. இந்தியாவின் பல பகுதிகளில் காற்றில் கலந்துள்ள PM2.5 துகள்கள் ஒரு கொடிய காரணியாக மாறியுள்ளன.

சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான 10 ஆண்டு கால தெளிவான வரைபடத்தை ஃபிக்கி - இஒய் அமைப்பு முன்வைக்கிறது. முதலாவதாக, தற்போதுள்ள PM2.5 மற்றும் ஓசோன் தரநிலைகளை, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் பாதுகாப்பு அளவுகளுக்கு ஏற்ப கடுமையான சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, தேசிய தூய்மையான காற்று திட்டத்தை மறுசீரமைத்து, அதில் PM2.5 மற்றும் ஓசோன் மாசுபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

மூன்றாவதாக, காற்று மாசுபாடு குறித்த ஆதாரங்கள் மற்றும் பொது சுகாதாரத்தின் மீதான அதன் பாதிப்புகள் குறித்து தற்போது ஏராளமான புதிய தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், 1981-ம் ஆண்டின் காற்று மாசு தடுப்பு சட்டத்துக்கு மாற்றாக, புதிய தூய்மையான காற்றுச் சட்டத்தை கொண்டுவர வேண்டும்.

நீண்ட மற்றும் சிறப்பான வரலாற்றைக் கொண்ட ஃபிக்கி - இஒய் அமைப்பு முன்வைத்துள்ள இந்த ஆய்வை, மோடி அரசால் நிச்சயமாக புறக்கணிக்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>இடம்: டெல்லி</p></div>
புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி இந்தியாவில் உள்ள வங்கதேச தூதரகத்துக்கு ஷேக் ஹசீனா கடிதம்

X