ராகவ் சத்தா
புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் 10 எம்.பி.க்கள் இருந்தனர். அவர்களில் ராகவ் சத்தா, சந்தீப் பதக், அசோக் மிட்டல், சுவாதி மாலிவால், ஹர்பஜன் சிங், ராஜீந்தர் குப்தா, விக்ரம்ஜித் சிங் சாஹ்னி ஆகிய 7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இதுதொடர்பாக ராகவ் சத்தா நேற்று கூறியதாவது:
அச்ச உணர்வின் காரணமாக ஆம் ஆத்மியில் இருந்து விலகியிருப்பதாக அந்த கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். நாங்கள் அச்ச உணர்வால் விலகவில்லை. ஆம் ஆத்மி மீதான அதிருப்தி, விரக்தி, வெறுப்புணர்வு காரணமாக அந்தக் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளோம். ஆடம்பர மாளிகை விவகாரம் (கேஜ்ரிவால் வசித்த டெல்லி வீடு) காரணமாக ஆம் ஆத்மி மீதான நன்மதிப்பு குறைந்து உள்ளது. இதன் காரணமாகவே கடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த கட்சி மோசமான தோல்வியை தழுவியது. தற்போது 2-வது ஆடம்பர மாளிகை (கேஜ்ரிவாலின் தற்போதைய வீடு) விவகாரம் அம்பலமாகி உள்ளது. இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் ரத்தம், வியர்வை சிந்தி மிகக் கடினமாக உழைத்தனர். கட்சி தலைமையிடம் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த அவர்கள் தற்போது அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். உண்மையை சொல்வதென்றால் ஆம் ஆத்மி தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அந்தக் கட்சியில் யாரும் நீடித்து நிலைத்திருக்க விரும்பவில்லை.
ஒரு கட்சியில் ஊழல் அதிகரித்தால் அந்த கட்சியின் எம்பிக்கள் அணி மாற அரசியலமைப்பு சட்டத்தில் இடம் உள்ளது. இதன் காரணமாகவே ஆம் ஆத்மியில் இருந்து ஒரே நேரத்தில் 7 எம்பிக்கள் வெளியேறி உள்ளோம். மாநிலங்களவையில் நாங்கள் தனி அணியாக செயல்படுவோம். பாஜகவுக்கு இணக்கமாக செயல்படுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.