இந்தியா

“உக்ரைன், மேற்கு ஆசிய அமைதி முயற்சிக்கு இந்தியா ஆதரவு” - பிரதமர் மோடி உறுதி

டெல்லியில் போலந்து பிரதமருடன் பேச்சு

மோகன் கணபதி

புதுடெல்லி: இந்தியா, போலந்து இடையே பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி ஆகிய துறைகளில் இன்று உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், “உக்ரைனாக இருந்தாலும் சரி, மேற்கு ஆசியாவாக இருந்தாலும் சரி, அமைதிக்கான அர்த்தமுள்ள எந்தவொரு முயற்சியையும் இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும்” என்று அவர் கூறினார்.

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தினார். இதையடுத்து, இரு தலைவர்களும் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “போலந்து பிரதமரை இந்தியாவுக்கு அன்புடன் வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 2024-ம் ஆண்டு நான் போலந்து சென்றபோது, அவரும் அவரது குழுவினரும் எனக்கு மிகவும் அன்பான வரவேற்பை அளித்தார்கள். அந்த பயணத்தின்போது, நாங்கள் இருதரப்பு உறவை உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தினோம்.

அந்த வலுவான அடித்தளத்தின் மீது கடந்த இரண்டு ஆண்டுகளில் எங்கள் கூட்டாண்மை புதிய வேகத்தைப் பெற்றுள்ளது. இந்தியா, போலந்து இடையேயான நட்பு வெறும் தூதரக உறவுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக அது மனிதநேயம், ஒருவருக்கொருவர் காட்டும் அனுதாபம் எனும் பொதுவான விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டது.

இரண்டாம் உலகப் போரின்போது, ஜாம்நகர் மற்றும் கோலாப்பூர் அரசு குடும்பங்கள், போலந்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குழைந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் இந்தியாவில் அடைக்கலம் அளித்தன.

இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதார வலிமை, இந்தியா, போலந்து கூட்டாண்மைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. இந்திய, ஐரோப்பிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்த வாய்ப்புகளை இன்னும் விரிவுபடுத்தி உள்ளது.

பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி ஆகிய துறைகளில் உறவை மேலும் ஆழப்படுத்த நாங்கள் இன்று உடன்பாடு எட்டியுள்ளோம். இந்த முக்கிய துறைகளில் போலந்து நிறுவனங்கள், இந்தியாவுடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும், பொருட்களை உற்பத்தி செய்யவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

கலாச்சார உறவுகளும், மக்களுக்கு இடையிலான பிணைப்புகளுமே எங்கள் உறவின் மிகப்பெரிய பலமாகும். போலந்தில் சமஸ்கிரு ஆய்வுகள் மற்றும் இந்தியவியல் குறித்த வளமான மரபு இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தியாவும் போலந்தும் ஜனநாயக விழுமியங்களையும் சட்டத்தின் ஆட்சியையும் நம்புகின்றன. உலகளாவிய நிர்வாக அமைப்புகளை மேலும் வலுவானதாகவும் திறம்பட செயல்படக்கூடியதாகவும் மாற்ற, சீர்திருத்தங்கள் அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம். உக்ரைனாக இருந்தாலும், மேற்கு ஆசியாவாக இருந்தாலும் அமைதிக்கான அர்த்தமுள்ள எந்தவொரு முயற்சியையும் இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும்.” என தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT