இஸ்ரேலில் பணியாற்றும் ராம் அச்சல்
லக்னோ: இஸ்ரேல் நாட்டில் வழக்கம்போல கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்று உத்தர பிரதேச தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவத்தின் அயர்ன் டோம் அமெரிக்க ராணுவத்தின் தாட் வான் பாதுகாப்பு கவசங்கள் காரணமாக இஸ்ரேலில் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்படவில்லை. இஸ்ரேல் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் பதுங்கு அறைகள் கட்டப்பட்டு உள்ளன. ஈரான் ராணுவ ஏவுகணைகள், இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்தால் சைரன் ஒலி எழுப்பப்படும். அப்போது மட்டும் பாதுகாப்பு அறைகளில் மக்கள் தஞ்சமடைகின்றனர்.
இஸ்ரேல் முழுவதும் சுமார் 42,000-க்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக கட்டுமானம், விவசாயம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அவர்கள் அதிகமாக உள்ளனர். உத்தர பிரதேசத்தின் பாராபங்கியை சேர்ந்த சுமார் 25 பேர் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் கட்டுமான தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களில் அங்குர் சிங் என்பவர் அண்மையில் தனது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணைகள் வீசப்படுகின்றன. ஆனால் அவை நடுவானில் இடைமறித்து அழிக்கப்படுகின்றன. நாங்கள் தனித்தனி வீடுகளில் வசிக்கிறோம். ஒரு வீட்டில் 10 தொழிலாளர்கள் தங்கி உள்ளோம். தினமும் காய்கறி, மளிகை பொருட்களை வாங்க வழக்கம்போல கடைக்குச் செல்கிறோம். சிலர் நகரை சுற்றிப் பார்க்கவும் செல்கின்றனர். நாள்தோறும் கட்டுமான பணிக்குச் சென்று வீடுகளுக்கு திரும்புகிறோம். எங்களது இயல்பு வாழ்க்கை சிறிதளவு கூட பாதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலில் பணியாற்றும் ராம் அச்சல் உறவினர்களிடம் வீடியோ காலில் பேசும்போது, “டெல் அவிவ் நகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில் உள்ள நகரில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறேன். இங்கு வழக்கம்போல கட்டுமான பணி நடைபெறுகிறது. சைரன் ஒலி கேட்கும்போது மட்டும் பதுங்கு அறைகளுக்கு செல்வோம். அதன் பிறகு தொடர்ந்து கட்டுமான பணிகளில் ஈடுபடுவோம்” என்று தெரிவித்தார்.
இஸ்ரேலில் பணியாற்றும் தொழிலாளர்களின் உறவினர்கள் கூறும்போது, “இஸ்ரேலை குறிவைத்து 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ஏவுகணை வீசப்படுகிறது. ஆனால் அவை நடுவானில் துல்லியமாக அழிக்கப் படுகின்றன. சைரன் ஒலி கேட்கும்போது மட்டும் இந்திய தொழிலாளர்கள் பதுங்கு அறைகளில் தஞ்சம் அடைகின்றனர். இஸ்ரேலில் உள்ள எங்களது உறவினர்களிடம் தொடர்ந்து வீடியோ காலில் பேசி வருகிறோம். அவர்கள் பாதுகாப்பாக இருந்தாலும் எங்களுக்கு மனதளவில் அச்சம் நீடிக்கிறது” என்று தெரிவித்தனர்.