இந்தியா

“ஒலிம்பிக்கின் பாதி விளையாட்டுகளில் நாம் பங்கேற்பதில்லை” - பிரதமர் மோடி கவலை

மோகன் கணபதி

புதுடெல்லி: ஒலிம்பிக்கில் இடம்பெறும் விளையாட்டுகளில் பாதியில்கூட நாம் பங்கேற்பதில்லை என்று கவலை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, கடந்த காலங்களில் பங்கேற்காத ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்பதன் மூலம் மட்டுமே ஒலிம்பிக்கில் இந்தியாவின் செயல்பாடு மேம்படும் என்று தெரிவித்துள்ளார்.

விளையாட்டு தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தவாறு விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியது: “ஆகஸ்ட் 29-ம் தேதி தேசிய விளையாட்டு தினம் வர உள்ளது உங்கள் அனைவருக்கும் தெரியும். நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கும் விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய அனைவருக்கும் விளையாட்டு தினத்துக்கான எனது வாழ்த்துகளை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து நான் ஆற்றிய உரையில், விளையாட்டுத் துறை குறித்தும் நாட்டின் கவனத்தை ஈர்த்தேன். விளையாட்டுப் பற்றி நான் பேசும்போது அது வெறும் பதக்கங்களை வெல்வதைப் பற்றியது மட்டுமல்ல. வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் இந்தியாவின் விளையாட்டுத் திறனையும் இளைஞர் சக்தியையும் ஒன்றிணைப்பதற்கான ஒரு முன்னெடுப்பு இது.

இன்றைய நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். உலக விளையாட்டு வரைபடத்தில் சிறந்து விளங்கும் ஆற்றல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் உள்ளது. இந்த ஆற்றலைப் புரிந்துகொண்டு நாம் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பாதிக்கும் குறைவானவற்றில் மட்டுமே இந்திய அணிகள் பங்கேற்கின்றன. பதக்கப் பட்டியலில் ஒரு பெரும் பகுதிக்கு நாம் போட்டியிடுவதே இல்லை. இது பல பத்தாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. 2012 ஒலிம்பிக்கில் இந்தியா 13 விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றது. 20-க்கும் மேற்பட்ட போட்டிகளில் நாம் பங்கேற்கவே இல்லை.

உதாரணத்துக்கு அலைச்சறுக்கு, மலை ஏறுதல் போட்டி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். நமக்கு நீண்ட கடற்கரைப் பகுதியும், பரந்த மலைப் பகுதிகளும் உள்ளன. நீர் சார்ந்த விளையாட்டுகள் முதல் பனிச்சறுக்கு போன்ற குளிர்கால விளையாட்டுகள் வரை அனைத்துக்கும் ஏற்ற மக்கள் தொகையும் புவியியல் சூழலும் நம்மிடம் உள்ளன. ஆனால், இத்தகைய விளையாட்டுக்களில் நமக்கு வலுவான பங்களிப்பு இல்லை. எனவே, இத்தகைய விளையாட்டுக்களுக்கான சூழலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து அதை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

5 முதல் 15 வயதுக்கு உட்பட்ட திறமையாளர்களைக் கண்டியும் ஒரு பெரிய முயற்சியைப் பற்றி நான் அறிவித்தேன். ஒரு குழந்தைக்கு எந்த விளையாட்டில் ஆர்வம் உள்ளது என்பதை மட்டும் பார்க்காமல், எந்த விளையாட்டுக்கு அவர்கள் மிகவும் பொருத்தமானவர்கள் என்பதையும் நாம் கவனித்தில் கொள்ள வேண்டும். அதற்கேற்ப அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

இதில் அரசின் முழு ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். 21ம் நூற்றாண்டுக்கு ஏற்ற நவீன விளையாட்டுச் சூழலை உருவாக்குவதில் அரசு முழு உறுதியுடன் உள்ளது. விளையாட்டு அறிவியல், பயிற்சி, அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் ஆகியவற்றில் பிற நாடுகளுடன் நாங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறோம்.

ஆரோக்கியமான சமூகத்துக்கு விளையாட்டு மனப்பான்மை அவசியம் என்று நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். விளையாட்டு மைதானத்துக்குச் செல்லாமல் இந்த மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது மிகவும் கடினம். விளையாட்டு, நாம் வெற்றியாளர்களாகத் திகழ்வதை மட்டுமல்லமால், சிறந்த போட்டியாளர்களாகத் திகழவும் கற்றுக்கொடுக்கிறது.

வெற்றி... தோல்வி... மீண்டும் வெற்றி... தோல்வி என விளையாட்டு தரும் இந்த மாற்றங்கள் நம்முள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உத்வேகத்தை அளிக்கிறது. விளையாட்டு ஒருவரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்க வல்லது என்பதற்கு நமது மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவர்கள் சாதனை படைக்கும்போது அவர்களின் ஒட்டுமொத்த குடும்பமும் ஒரு புதிய வாழ்க்கையைப் பெறுகிறது. அத்தகைய விளையாட்டு வீரர்களைக் கண்டு நானும் ஊக்கம் பெருகிறேன்” என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

SCROLL FOR NEXT