கோப்புப் படம்
பர்ரக்பூர் (மேற்கு வங்கம்): “சமூக விரோத சக்திகளால் எனது கார் மீது பெரிய கற்கள் வீசப்பட்டன. வாகனத்தின் கண்ணாடி மட்டும் திறந்திருந்தால் எனது மண்டை உடைந்திருக்கும்” என்று மம்தா பானர்ஜி மிகுந்த அதிர்ச்சியுடன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சித் தொண்டர் ஒருவர் போலீஸ் காவலில் கொல்லப்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க சென்றிருந்தார்.
அப்போது, அவரது காரை சூழ்ந்து கொண்ட ஒரு கூட்டம் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியது. மேலும், சிலர் கற்களையும் சேறுகளையும் எடுத்து கார் மீது வீசினர். இதனால், அங்கு பதற்றமான சூழல் உருவானது.
பின்னர் அங்கிருந்து திரும்பிய மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், “போலீசாரின் கண் முன்பாகவே சமூக விரோத சக்திகள் எனது கார் மீது பெரிய கற்களை எடுத்து வீசினர். எனது கார் மீதான தாக்குதல் மிகவும் கடுமையானதாக இருந்தது. ஒருவேளை எனது காரின் கண்ணாடி மட்டும் திறந்திருந்தால் எனது மண்டை உடைந்திருக்கும். நாங்கள் அனைவரும் கொல்லப்பட்டிருப்போம்.
காவல்துறையினரின் கண் முன்பாகவே இது நடந்தது. இதுபோன்ற ஒரு சம்பவத்தை நான் பார்த்ததே இல்லை. என்ன நடந்து கொண்டிருக்கிறது. காவல்துறையினர் பாஜகவினருக்கு பாதுகாப்பு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.” என மிகுந்த ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
மம்தா பானர்ஜியின் வாகனம் தாக்கப்பட்டது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா, “முன்னாள் முதல்வரின் வாகனம் மீது கற்களை, சேற்றை அல்லது செருப்பை யாராவது வீசினால் அதை பாஜக ஆதரிக்காது. இதில் பாஜக தொண்டர்கள் யாரும் ஈடுபடவில்லை.
இது மக்களுக்கும் மம்தா பானர்ஜிக்கும் இடையேயானது. மாநிலத்தின் முன்னாள் பெண் முதல்வருக்கு இப்படி நேர்ந்ததை நாங்கள் விரும்பவில்லை. இத்தகைய நடவடிக்கைகள் மேற்கு வங்கத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவிக்கும். இந்த சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த அமைச்சர் அக்னிமித்ரா பால், “இந்த சம்பவத்தை எங்கள் கட்சியோ அரசோ ஆதரிக்கவில்லை. இது எங்கள் கலாச்சாரம் கிடையாது. மம்தா பானர்ஜி பல தவறுகளைச் செய்திருக்கலாம். ஆனால், ஒரு பெண் குறிப்பாக வயதான ஒரு பெண்ணுக்கு இப்படி நடப்பதை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க முடியாது. பாஜகவினர் என கூறிக்கொண்டு யாரேனும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் தவறு செய்கிறார்கள் என்றே அர்த்தம்.” என தெரிவித்துள்ளார்.