சித்தராமையா சிவகுமார்

 
இந்தியா

“நாங்கள் இருவரும் டெல்லி செல்வோம்” - முதல்வர் சர்ச்சை குறித்து டி.கே.சிவகுமார் பேச்சு!

வெற்றி மயிலோன்

பெங்களூரு: “முதல்வர் மாற்ற விவகாரம் குறித்து விவாதிக்க டெல்லிக்கு அழைப்பது எப்போது என காங்கிரஸ் மேலிடம் எங்கள் இருவரிடமும் தெரிவித்துள்ளது” என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

கர்​நாட​கா​வில் சித்​த​ராமையா முதல்​வராக பதவி​யேற்று இரண்டரை ஆண்​டு​கள் நிறைவடைந்த நிலை​யில், துணை முதல்வர் டி.கே.சிவகு​மாருக்கு முதல்​வர் பதவி வழங்க வேண்​டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்​கொடி உயர்த்தினர். இதுகுறித்து சிவகுமார் ஆதரவாளர்கள் டெல்லி சென்று காங்கிரஸ் மேலிடத்திடம் வலியுறுத்தியது சலசலப்பை உருவாக்கியது. அதனை தொடர்ந்து மேலிட உத்தரவின் பேரில் இரு தலைவர்களும் சமாதானம் அடைந்து இணைந்து செயல்பட்டனர்.

இந்தச் சூழலில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமார், “அழைப்பு வரும்போது, ​​நாங்கள் இருவரும் டெல்லிக்குச் சென்று மேலிடத்தை சந்திப்போம். டெல்லி செல்வது பற்றி நான் உங்களுக்குத் தெரிவிப்பேன், உங்களுக்குத் தெரிவிக்காமல் நான் எதுவும் செய்ய மாட்டேன். உங்களிடமிருந்து மறைந்து நான் செல்ல மாட்டேன்” என்றார்.

சித்தராமையாவும், நீங்களும் டெல்லி செல்ல வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “ கட்சி மேலிடம் எங்கள் இருவரிடமும் இதுகுறித்து சொல்லியிருக்கிறார்கள், எப்போது அழைப்போம் என்று தொலைபேசி மூலம் எங்கள் இருவரிடமும் தெரிவித்துள்ளனர். நாங்கள் இருவரும் டெல்லி செல்வோம்.

சரியான நேரத்தில் எங்கள் இருவரையும் அழைப்போம் என்று மேலிடத்திலிருந்து எங்களிடம் கூறியுள்ளனர், நாங்கள் அந்த அழைப்பிற்காகக் காத்திருப்போம்.” என்று அவர் கூறினார்.

முன்னதாக சித்தராமையா நேற்று சட்டப்பேரவையில் பேசுகையில், “ எனது முதல்வர் பதவிக்காலம் பாதி காலத்திற்கு மட்டுமே என்று நான் ஒருபோதும் கூறியதில்லை. ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை நான் நிறைவு செய்ய மேலிடம் அனுமதிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. மேலிடம் என் பக்கம்தான் இருக்கிறது என்று நான் உணர்கிறேன், ஆனால் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT