பாட்னா: பிஹார் மாநில அரசுப் பள்ளியில் மதிய உணவில் உப்புக்கு பதில் சலவைத் தூள் கலக்கப்பட்டதால், அதைச் சாப்பிட்ட 36 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிஹார் மாநிலம் நாளந்தா மாவட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கிய மதிய உணவில், உப்புக்குப் பதில் சமையல்காரர் தவறு தலாகச் சலவைத் தூள் கலந்துவிட்டார். இந்த சோயாபீன் சாதத்தை சாப்பிட்ட 36 மாணவிகளுக்குத் தலைசுற்றலும், வாந்தியும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் பிஹார் ஷரீப் சர்தார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உணவில் உப்பு இல்லை என்று மாணவிகள் புகாரளித்த நிலையில், ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்த உப்பு, சலவைத் தூள் டப்பாக்களால் குழப்பம் ஏற்பட்டு இத்தவறு நடந்துள்ளது.
தற்போது குழந்தைகள் அனைவரும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், மதிய உணவு தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட இந்த தீவிர அலட்சியப் போக்கு குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.