வாஷிங்டன் டி.சி.: பிரதமர் நரேந்திர மோடி உடனான அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் தொலைபேசி உரையாடல் பயனுள்ளதாக இருந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் கடந்த செவ்வாய் கிழமை தொலைபேசியில் உரையாடினார். அப்போது, மேற்காசியாவில் நிகழும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இரு தலைவர்களுக்கு இடையேயான இந்த உரையாடலில், கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்க்கும் இணைந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. எனினும், எலான் மஸ்க் என்ன பேசினார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இரு நாட்டு தலைவர்கள் இடையேயான தொலைபேசி உரையாடலில் அரசாங்க தொடர்பு இல்லாத ஒரு தனி நபர் இணைவது பேசுபொருளானது. இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், ‘‘அதிபர் ட்ரம்ப்புக்கு பிரதமர் மோடியுடன் ஒரு சிறந்த உறவு உள்ளது. மேலும், இது ஒரு பயனுள்ள உரையாடலாக இருந்தது’’ என்று தெரிவித்தார்.
டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபர் ஆனதும், அந்த அரசில் எலான் மஸ்க்கும் இடம் பெற்றிருந்தார். பணியாளர் எண்ணிக்கையை குறைக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு எலான் மஸ்க் பொறுப்பில் இருந்து விலகினார். இந்நிலையில், ட்ரம்ப் மற்றும் மஸ்க் இடையே மீண்டும் நல்லுறவு ஏற்பட்டிருக்கிறது. இரண்டு அமெரிக்க அரசு உயர் அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தி இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியுடன் அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியது குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பிரதமர் மோடியுடன் அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேசினார். மேற்கு ஆசிய நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்தனர். ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்” என்று தெரிவித்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘அதிபர் ட்ரம்ப்பிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மேற்கு ஆசியா நிலவரம் குறித்து இருவரும் ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். மேற்கு ஆசியாவில் பதற்றத்தைத் தணித்து உடனடியாக அமைதியை ஏற்படுத்த இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது. ஒட்டுமொத்த உலகத்துக்காகவும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டும். அமைதி முயற்சி தொடர்பாக இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருப்போம்” என்று தெரிவித்திருந்தார்.