அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
கேரளாவில் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் இடதுசாரி முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றுக்கு இடையே கடும் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
சபரிமலை விவகாரம், வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இன்று நடைபெறவுள்ள தேர்தலில் 2.71 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 1.32 கோடி ஆண் வாக்காளர்களும், 1.39 கோடி பெண் வாக்களர்களும், 2.42 லட்சம் வெளிநாட்டில் வசிக்கும் கேரள வாக்காளர்களும் அடங்குவர்.
அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கு இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்கு ஆளும் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மகாஜோத் கூட்டணிக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் ஊதியப் பிரச்சினை ஆகியவை இங்குத் தேர்தல் களத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளன. பதற்றமான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்துத் தலைவர்கள் பிரசாரம் செய்திருந்தனர். அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்தத் தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
வெப்ப அலை தாக்கம் காரணமாக, வாக்குச்சாவடிகளில் நிழற்குடைகள் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்கச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மற்ற மாநிலங்களுடன் சேர்த்து மே மாதம் 4-ம் தேதி வெளியாகவுள்ளன.