சென்னை: இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்லாக, உள்நாட்டு தனியார் நிறுவனத்தால் முழுமையாக வடிவமைக்கப்பட்ட முதல் ஆர்பிட்டல் வகை ராக்கெட்டான ‘விக்ரம்-1’ இன்று (ஜூலை 18) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று இந்த வரலாற்று சிறப்புமிக்க முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை 11.30 மணிக்கு விக்ரம்-1 ராக்கெட் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மேகமூட்டம் சார்ந்த வானிலை காரணமாக 35 நிமிடம் தாமதமாக பகல் 12.05க்கு விண்ணில் ஏவப்பட்டது.
ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விண்வெளித்துறையின் IN-SPACe அமைப்பின் தலைவர் பவன் கே கோயங்கா, “இந்தியாவின் தனியார் துறை சார்ந்த முதல் ஏவுதல் முயற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது என்பதை முறைப்படி அறிவிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். விக்ரம்-1 ராக்கெட் 453 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது எதிர்பார்ப்புகளையும் தாண்டிய ஒரு சாதனை” என தெரிவித்துள்ளார்.
ராக்கெட் ஏவப்படுவதை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேரில் பார்வையிட்டார். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து அவர், இந்த திட்டத்தில் தொடர்புடைய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ தயாரித்துள்ள இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
பிரதமர் தனது எக்ஸ் பதிவில், “இந்திய விண்வெளிப் பயணத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய மைல்கல். இன்று காலை 11.30 மணிக்கு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-1 ஐ வெற்றிகரமாக ஏவும்.
விரைவான மற்றும் தேவைக்கேற்ப ஏவுதல் சேவைகளை வழங்கும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நமது இளைஞர்களின் திறமை, உறுதி, தொழில்முனைவு மனப்பான்மை ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.
மேலும், நமது விண்வெளித்துறை சீர்திருத்தங்கள், புத்தாக்கம், தொழில்முனைவுக்கான புதிய வாய்ப்புகள் ஆகியவற்றை எவ்வாறு உருவாக்குகின்றன என்பதையும் இது காட்டுகிறது.
இந்த வெற்றிகரமான ஏவுதலுக்காக ஸ்கைரூட் ஏராஸ்பேஸ் குழுவினர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். விக்ரம்-1 வானில் உயர்ந்து, சரித்திரம் படைத்து, ஒரு தலைமுறை புத்தாக்கவாதிகளுக்கு உத்வேகம் அளிக்கட்டும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தின் வெற்றியை அடுத்து, #IndiaWithVikram1 என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ஸ்கைரூட் குழுவின் வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்குமாறு அனைத்து இந்தியர்களையும் குறிப்பாக எனது இளம் நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
‘மிஷன் ஆகமன்:
‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ராக்கெட்டின் பயணத்துக்கு ‘மிஷன் ஆகமன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனம், தான் சொந்தமாக உருவாக்கிய ஏவுதளத்தை பயன்படுத்தி செயற்கைக்கோளை விண்வெளி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த முயற்சிப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த பயணத்தின் நோக்கம் ஒர் செயற்கைக்கோளை மட்டும் விண்ணில் செலுத்துவது அல்ல. மாறாக, ராக்கெட்டின் அனைத்து நிலைகளும் விண்வெளி பயணத்தின் போது எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நேரடியாக மதிப்பீடு செய்து தரவுகளை சேகரிப்பதே இந்த சோதனையின் பிரதான இலக்காகும்.
350 கிலோ வரை எடை கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான செயற்கைக்கோள்களை 450 கிமீ தூரத்தில் பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.