புதுடெல்லி: மகாகவி சுப்பிரமணிய பாரதியார், தியாகி இமானுவேல் சேகரனார் ஆகியோரின் நினைவு நாளையொட்டி, குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் அவர்களின் உருவ படத்துக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதா கிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: தம் வாழ்நாளைத் தேசப் பணிக்கும் தமிழ்த் தொண்டுக்கும் அர்ப்பணித்த பாரத அன்னையின் தவப்புதல்வர், பாட்டு புலவன் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
‘செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என்று பல்வேறு மொழிகளை நாம் பேசினாலும், சிந்தனையால் ஒன்றுபட்ட மகத்தான தேசத்தினுடைய குடிமக்கள் என்பதை ஓங்கி உரைத்த மகாகவி பாரதியார் போல இன்னொரு மாபெரும் புலவன் பிறந்து வருவதற்கு இன்னும் எத்தனை யுகம் எடுக்கும் என்பது நமக்குத் தெரியாது. தேசப்பற்று, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றை தம் கவிதைகளால் எடுத்துரைத்த பாரதியாரின் நினைவைப் போற்றுவோம்.
தியாகி இமானுவேல் சேகரனார் ஒரு மகத்தான மாமனிதர். சாதிகளால் ஒருவரை ஒருவர் உயர்ந்தவராகவும் தாழ்ந்தவராகவும் கருதி வாழக் கூடாது என்கின்ற சமநீதியை நிலைநாட்ட தன் உயிரைத் தந்தவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.