

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் 14.43 லட்சம் விவசாயிகள் பெற்ற ரூ.5,932 கோடி மதிப்பிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து, கடன் தள்ளுபடிக்குத் தகுதியான விவசாயிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில் 13.34 லட்சம் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடிக்குத் தகுதியானவை என கண்டறியப்பட்டன.
அவர்களுக்கான தள்ளுபடித் தொகையாக ரூ.5,267 கோடி கணக்கிடப்பட்டு, 2026 ஜூலை 31-ம் தேதி வரை 4 தவணைகளில் இத்தொகை விடுவிக்கப்பட்டு, தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக் குகளில் செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள், துறைச் செயலர்கள் ஆக.7-ம் தேதி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், பயிர்க் கடன் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், பயிர்க் கடன்தள்ளுபடி திட்டத்தை விரிவுபடுத்தி சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் விஜய், ஆக.17-ம் தேதி அறிவித்தார். அதன்படி, ரூ.75,000 வரைபயிர்க் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.
ரூ.75,001 முதல் ரூ.1 லட்சம் வரை பெற்றவர்களுக்கு ரூ.75,000 வரையும், ரூ.1 லட்சத்துக்கு மேல் வாங்கியவர்களுக்கு ரூ.35,000 வரையும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் ரூ.75,001 முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்ற 2.38 லட்சம் விவசாயிகளுக்கு ஏற்கெனவே தலா ரூ.35,000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது புதிய அறிவிப்பின்படி, மேலும் தலா ரூ.40,000 தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.
இதன்மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் மொத்தம் ரூ.75,000 பயிர்க் கடன் தள்ளுபடி கிடைக்கும். இதற்காக ரூ.953 கோடி கூடுதல் தொகை ஒதுக் கப்பட்டு, கூட்டுறவுத் துறை சார்பில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருப்பது குறிப் பிடத்தக்கது.