இந்தியா

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்: குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளான இன்று அவரது திருவுருவப் படத்துக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு இன்று நினைவு நாள். இதையொட்டி, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “தூக்குக் கயிற்றை முத்தமிட்டு, தன் வீரத்தையும் நம் மண்ணின் மீது இருக்கிற பாசத்தையும் வெளிப்படுத்திய மகத்தான மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன்.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிய மறுத்து, அஞ்சா நெஞ்சத்துடன் அவர்களுக்கு எதிராகக் கடும் போர் புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரமும் தியாகமும், தன்னுரிமையைப் பாதுகாப்பதில் அவர் கொண்டிருந்த உறுதியும் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அழியாத தடம் பதித்துள்ளன.

அவரைப் போன்ற மகத்தான வீரர்களின் உயிர்த் தியாகம்தான் இந்தியாவை இன்று வழிநடத்துகிறது. நாட்டினை மிகப் பெரிய உயரத்துக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது.

வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரம் செறிந்த வாழ்வு தலைமுறைகள் பல கடந்தாலும் மக்களின் உள்ளங்களில் என்றும் நிலைத்திருக்கும். அவருக்கு, தேசம் தன்னுடைய புகழஞ்சலியைச் செலுத்துவதில் பெருமை கொள்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT