புதுடெல்லி: நாடு முழுவதிலும் உள்ள வாகனங்களில் 70% போக்குவரத்து விதிகளை மீறியவை எனத் தெரிய வந்துள்ளது. இவற்றில் 17 கோடி வாகனங்களின் பதிவுகள் ரத்தாகும் அபாயமும் எழுந்துள்ளது. இதன் பின்னணி குறித்து பார்ப்போம்.
இந்தியச் சாலைகளில் 40.7 கோடி எண்ணிக்கையிலான வாகனங்கள் ஓடுகின்றன. இவற்றில் 70்% விதிகளை மீறியவை எனத் தெரியவந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இருசக்கர வாகனங்கள்.
எனவே, நாடு முழுவதும் உள்ள தகுதியான ஆவணங்களைக் கொண்டிராத வாகனங்களின் பதிவை படிப்படியாக ரத்து செய்வதற்காக ஓர் அமைப்பை உருவாக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த பரிந்துரை சாலைப் போக்குவரத்து துறையில் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின் அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பரிந்துரையை மாநிலங்கள் ஏற்றால் நாட்டின் 17 கோடி வாகனங்களின் பதிவு ரத்தாகும் வாய்ப்புள்ளது. மத்திய அரசு தனது பரிந்துரையில், இதுபோன்ற வாகனங்கள் குறித்த புள்ளி விவரங்களை மாநில அரசுகளுக்கு பகிர்ந்துள்ளது.
இந்த பரிந்துரையில், வாகன உரிமையாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தம் வாகன ஆவனங்களின் குறைபாடுகளை பூர்த்தி செய்யவும் ஒரு அமைப்பை உருவாக்க முன்மொழிந்துள்ளது. மத்திய அமைச்சகத்தின் முன்மொழிவின்படி, வாகன உரிமையாளர்கள் தம் ஆவணங்களின் குறைபாடுகளை சரிசெய்யவில்லை எனில், அதன் பதிவுகள் படிப்படியாக ரத்து செய்யப்படும்.
இதுபோல் குறைபாடுள்ள ஆவணங்களுடன் தமிழ்நாட்டில் சுமார் 40% வாகனங்கள் ஓடுவதாகவும் புள்ளிவிவரம் கிடைத்துள்ளது. இந்த எண்ணிக்கை கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களிலும் அதே அள்வில் உள்ளன.
இந்தியாவிலேயே தெலங்கானாவில் மட்டுமே பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் 20% என குறைபாடுனாட ஆவணங்களுடன் வாகனங்கள் உள்ளன.
விதிமுறைகளைப் பின்பற்றாத வாகனங்களின் உரிமையாளர்கள், ஒரு வருடத்திற்குள் தங்கள் தகுதிச் சான்றிதழ், மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் மற்றும் காப்பீட்டைப் புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களின் வாகனம் ’தற்காலிகமாகப் பதிவு நீக்கப்பட்ட’ பிரிவில் வைக்கப்படும்.
தகுதிச் சான்றிதழ், காப்பீடு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் ஆகியவை இரண்டு ஆண்டுகளுக்குப் புதுப்பிக்கப்படாமல் இருந்தால், அந்த வாகனம் ’நிரந்தரமாகப் பதிவு நீக்கப்பட்ட’ பிரிவில் வைக்கப்படும். போக்குவரத்து ஆணையரின் ஒப்புதலுக்குப் பின்னரே வாகனம் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.
நிரந்தரமாகப் பதிவு நீக்கப்பட்ட பிரிவு இறுதியானதாகக் கருதப்படும். எனினும் இதன் ஆவணங்களின் குறைபாடுகள், நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்ட விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடியும்.
இதற்கு சம்மந்தப்பட்ட போக்குவரத்து ஆணையரின் ஒப்புதல் தேவை. இந்த முறையின் வெளிப்படைத்தன்மைக்காக, அனைத்து தகவல்களும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டு இணையதளங்களில் வெளியிடப்படும்