பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்: 1,000+ காளைகள், 600+ வீரர்கள் பங்கேற்பு!

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

மதுரை: தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று (ஜன.16) காலை 9 மணி அளவில் தொடங்கியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகளும், 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தை முதல் நாளான நேற்று (ஜன.15), அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது.

இந்நிலையில், இன்று காலை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கியுள்ளது. மாடுபிடி வீரர்களின் உறுதிமொழியுடன் பாலமேடு ஜல்லிக்கட்டு ஆரம்பமானது. போட்டியின் தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதை தொடர்ந்து முதல் சுற்று தொடங்கியது. முதல் சுற்றில் 100 காளைகளும், 50 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர். அதிக காளைகளை அடக்கும் வீரர்களின் விவரத்தை அறிய களத்தில் டிஜிட்டல் பதாகையும் அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சுற்றுகளாக பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு வெவ்வேறு வண்ணத்திலான சீருடை (ஜெர்சி) அணிந்து பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னரே போட்டியில் பங்கேற்க காளைகளும், வீரர்களும் அனுமதிக்கப்பட்டனர். இந்த போட்டியில் விதிமுறைகளை மீறுபவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியை காண உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் பலர் பாலமேட்டில் முகாமிட்டுள்ளனர். போட்டியில் சிறந்து விளங்கும் காளை மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. களத்தில் காயமடையும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக பாலமுருகன் தேர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in