புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வீர சாவர்க்கரின் பேரன் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். அதில், சோனியாவின் நூலில் வீர சாவர்க்கர் குறித்து இடம்பெற்ற கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சோனியா காந்தியின் ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ எனும் நூல் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. அதில் தற்போது, சுதந்திரத்துக்காகப் போராடிய மூத்த தலைவரும், இந்துத்துவவாதியுமான விநாயக் தாமோதர் சாவர்க்கர் பற்றிய குறிப்பு சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
சோனியா காந்தி தனது நூலில், ‘காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் தாக்குதல்களுக்கும் சிறைவாசத்திற்கும் உள்ளாகினர். அதேவேளையில், விநாயக் தாமோதர் சாவர்க்கர் போன்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த கொள்கை வழிகாட்டிகள், காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு கருணை மனுக்களை எழுதிக்கொண்டிருந்தனர்.’ என விமர்சித்துள்ளார்.
இதையடுத்து விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பேரன் சத்யகி சாவர்க்கர், சோனியா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சத்யகி சாவர்க்கர் சார்பாக அவரது வழக்கறிஞர் சங்கிராம் கோல்ஹட்கர் இந்த நோட்டீசை அனுப்பியுள்ளார்.
சத்யகி சாவர்க்கர் தனது நோட்டீசில், புத்தகத்தின் 201 மற்றும் 443-வது பக்கங்களில் உள்ள கருத்துகள் ஆட்சேபனைக்குரியவை. இந்த உள்ளடக்கம் உண்மைகளுக்கு மாறானது, வரலாற்று ரீதியாகத் தவறானது.
இந்த கருத்துகள் சுதந்திரப் போராட்ட வீரரைப் பற்றிய தவறான சித்திரத்தை முன்வைக்கிறது. சிதைக்கப்பட்ட தகவல்களைக் கொண்ட இந்த கருத்துக்கள் வி.டி. சாவர்க்கரின் நற்பெயருக்கும் அவரது பாரம்பரியத்திற்கும் களங்கம் விளைவிப்பதாக உள்ளது. வி.டி.சாவர்க்கர் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளன.
சுதந்திரப் போராட்ட வீரர் சாவர்க்கர் குறித்த கருத்துகளுக்காக, சோனியா காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். மேலும், தனது கருத்துக்கு விளக்கமளித்து, அந்தத் தகவல்களைத் திருத்த வேண்டும்.
இந்த அறிவிப்பைப் பெற்ற 15 நாட்களுக்குள் சோனியா காந்தி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினாலோ அல்லது கோரிக்கைகளை ஏற்க மறுத்தாலோ, தகுந்த நீதிமன்றம் அல்லது அதிகார அமைப்பின் மூலம் சட்ட இந்த சட்ட அறிவிப்பில், நடவடிக்கைகளைத் தொடரக்கூடும்’ என எச்சரித்துள்ளார்.
பாஜக எம்எல்ஏக்கள் புகார்:
சோனியா காந்தியின் நூலில் விநாயக் தாமோதர் சாவர்க்கர் மற்றும் மறைந்த சிவ சேனா நிறுவனர் பால் தாக்கரே குறித்து இடம்பெற்றுள்ள கருத்துகள் தொடர்பாக, பாஜக எம்எல்ஏ ராம் கதம், உத்தவ் தாக்கரேவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் அவர், ‘சாவர்க்கரை அவமதித்த காங்கிரஸ் தலைவர்களை பால் தாக்கரே எதிர்த்த நிலையில், அவரது மகனான உத்தவ் தாக்கரே, சாவர்க்கரை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ள சோனியா காந்தியின் புத்தகத்தை மதிக்கிறார். அதிகாரத்திற்காக உத்தவ் தாக்கரே தனது கொள்கைகளில் எந்த அளவுக்கும் சமரசம் செய்துகொள்வாரா?’ என விமர்சித்துள்ளார்.
மற்றொரு பாஜக எம்எல்ஏவான கிருஷ்ணா கோப்டே, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், சோனியா காந்தியின் ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ நூலை மாநிலத்தில் விற்பனை செய்யத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
மேலும் அவர், ‘நூலில் உள்ள கருத்துகள் மாநிலத்திலும் நாட்டிலும் மத ரீதியான பதற்றத்தைத் தூண்டக்கூடும். இந்தப் புத்தகம் திட்டமிட்ட சதியின் ஒரு பகுதியாகவே வெளியிடப்பட்டுள்ளது. இந்துத்துவ சிந்தனையாளரான சாவர்க்கரின் பங்களிப்பு மற்றும் தியாகங்கள் குறித்து சோனியா காந்திக்கு எந்த அறிவும் இல்லை. தனது நூலை வெளியிடுவதற்கு முன்பாக, சோனியா காந்தி இந்திய கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.