இந்தியா

விபி ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல்

மோகன் கணபதி

புதுடெல்லி: வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் மசோதா 2025-க்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஊரக வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கிராமப்புற வேலைவாய்ப்புக் கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் மசோதா எனப்படும் விபி ஜி ராம் ஜி (VB—G RAM G) மசோதா 2025-க்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இந்தச் சட்டம், கிராமப்புறக் குடும்பங்களுக்கு ஒரு நிதியாண்டுக்கு 125 நாட்களுக்கு சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை வழங்குகிறது. மேலும், இது அதிகாரமளித்தல், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வளர்ச்சி முயற்சிகளின் ஒருங்கிணைப்பு, முழுமையான திட்டப் பலன்களின் விநியோகம் ஆகியவற்றை மேம்படுத்தி, செழிப்பான, மீட்சித்திறன் கொண்ட, தன்னிறைவு பெற்ற கிராமப்புற இந்தியாவுக்கான அடித்தளத்தை வலுப்படுத்துகிறது.

நாட்டில் கிராமப்புற வேலைவாய்ப்பிலும் மேம்பாட்டு கட்டமைப்பிலும் ஒரு தீர்க்கமான சீர்திருத்தத்தைக் குறிக்கும் வகையில், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கம் மசோதா 2025-ஐ நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இந்தச் சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (MGNREGA), 2005-க்கு பதிலாக கொண்டுவரப்பட்டுள்ளது. இது வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு நவீன சட்டப்பூர்வ கட்டமைப்பாக உள்ளது.

அதிகாரமளித்தல், வளர்ச்சி, ஒருங்கிணைப்பு, முழுமை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அமைந்த இந்தச் சட்டம், கிராமப்புற வேலைவாய்ப்பை ஒரு தனிப்பட்ட நலத்திட்டத்திலிருந்து, வளர்ச்சியின் ஒருங்கிணைந்த கருவியாக மாற்ற முயல்கிறது. இது கிராமப்புறக் குடும்பங்களுக்கான வருமானப் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது. நிர்வாகத்தையும் பொறுப்புணர்வையும் நவீனமயமாக்குகிறது. மேலும் ஊதியத்துடனான வேலைவாய்ப்பு அம்சத்தை, கிராமப்புற சொத்துக்கள் உருவாக்கத்துடன் இணைக்கிறது. இதன் மூலம், செழிப்பான, மீட்சித்திறன் கொண்ட கிராமப்புற இந்தியாவுக்கு அடித்தளம் அமைக்கப்படுகிறது.

சட்டத்தின் முக்கிய அம்சங்கள்: இந்தச் சட்டம், வயது வந்த, திறன் சாராத உடல் உழைப்புப் பணிகளை மேற்கொள்ளத் தாங்களாகவே முன்வருபவர்களுக்கு, ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒரு கிராமப்புறக் குடும்பத்திற்கு 125 நாட்களுக்குக் குறையாத ஊதிய வேலைவாய்ப்புக்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்குகிறது.

முந்தைய 100 நாள் வேலைவாய்ப்பை விட இது அதிகமானது. இது கிராமப்புறக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பு, வேலையின் முன்கணிப்புத்தன்மை, வருமான நிலைத்தன்மை ஆகியவற்றை கணிசமாக வலுப்படுத்துகிறது. அதே நேரத்தில், தேசிய வளர்ச்சிக்கு அவர்கள் மிகவும் திறமையாகவும் அர்த்தமுள்ள வகையிலும் பங்களிக்க இது உதவுகிறது.

விதைப்பு, அறுவடைப் பணிகள் நடைபெறும் காலங்களில் விவசாயத் தொழிலாளர்கள் போதுமான அளவில் கிடைப்பதை எளிதாக்கும் வகையில், ஒரு நிதியாண்டில் அறுபது நாட்கள் வரை மொத்தமாக ஒரு இடைநிறுத்தக் காலத்தை அறிவிக்க இந்தச் சட்டம் மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

முழுமையாக 125 நாள் வேலைவாய்ப்பு உத்தரவாதம் அப்படியே இருக்கும். அந்த வேலை மீதமுள்ள காலத்தில் வழங்கப்படும். இது விவசாய உற்பத்தித்திறன், தொழிலாளர் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் ஆதரிக்கும் ஒரு சீரான சமநிலையை உறுதி செய்கிறது.

இந்தச் சட்டம் ஊதியத்தை வாராந்திர அடிப்படையிலோ அல்லது வேலை முடிந்த பதினைந்து நாட்களுக்குள்ளாகவோ வழங்க வேண்டும் என்பதை கட்டாயமாக்குகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு மேல் தாமதம் ஏற்பட்டால், அட்டவணை II-ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி தாமதத்திற்கான இழப்பீடு வழங்கப்படும். இது ஊதியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு தொழிலாளர்களை ஊதிய தாமதங்களிலிருந்து பாதுகாக்கிறது.

இந்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்துடனான வேலைவாய்ப்பு, நீர் பாதுகாப்பு, நீர் தொடர்பான பணிகள், முக்கிய கிராமப்புற உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம் தொடர்பான உள்கட்டமைப்பு, பேரிடர் ஏற்படுத்தும் தீவிர வானிலை நிகழ்வுகளைத் தணிக்கும் பணிகள் ஆகிய நான்கு முன்னுரிமைத் துறைகளில் பொதுச் சொத்துக்களை உருவாக்குவதுடன் வெளிப்படையாக இணைக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்துப் பணிகளும் அடித்தள நிலையில் இருந்து திட்டமிடப்படுகின்றன. உருவாக்கப்பட்ட அனைத்துச் சொத்துக்களும் வளர்ச்சியடைந்த பாரதம் தேசிய கிராமப்புற உள்கட்டமைப்புத் தொகுப்பில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இது பொது முதலீடுகளின் ஒருங்கிணைப்பு, சிதறலைத் தவிர்ப்பது, மாறுபட்ட உள்ளூர் தேவைகளின் அடிப்படையில் முக்கியமான கிராமப்புற உள்கட்டமைப்பின் முழுமையான நிறைவு ஆகியவற்றை நோக்கிய, சிறந்த விளைவுகள் அடிப்படையிலான திட்டமிடலை உறுதி செய்கிறது.

அனைத்துப் பணிகளும் வளர்ச்சியடைந்த கிராம ஊராட்சித் திட்டங்களிலிருந்து (VGPPs) தொடங்குகின்றன. இவை கிராம ஊராட்சி மட்டத்தில் பங்கேற்பு செயல்முறைகள் மூலம் தயாரிக்கப்பட்டு கிராம சபையால் அங்கீகரிக்கப்படுகின்றன.

இந்தத் திட்டங்கள், பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் உட்பட தேசிய தளங்களுடன் டிஜிட்டல், இடம் சார்ந்த முறையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது பரவலாக்கப்பட்ட முடிவெடுக்கும் அதிகாரத்தை முழுமையாகத் தக்கவைத்துக்கொண்டு முழு ஒருங்கிணைப்புக்கு வழி வகுக்கிறது.

இந்த ஒருங்கிணைந்த திட்டமிடல் கட்டமைப்பு, அமைச்சகங்களும் துறைகளும் பணிகளை மிகவும் திறம்படத் திட்டமிட்டு செயல்படுத்தவும், பொது வளங்களின் விரயத்தைத் தவிர்க்கவும், முழுமையான பணிகள் மூலம் வளர்ச்சியை விரைவுபடுத்தவும் உதவும்.

இந்தச் சட்டம் ஒரு மத்திய அரசின் நிதியுதவித் திட்டமாகச் செயல்படுத்தப்படுகிறது. இது மாநில அரசுகளால், சட்டத்தின் விதிகளுக்கு இணங்க செயல்படுத்தப்படும்.

மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையேயான செலவுப் பகிர்வு முறை 60:40 என்ற விகிதத்தில் அமையும். வடகிழக்கு, இமயமலைத் தொடரிலுள்ள மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதத்தில் செலவுப் பகிர்வு இருக்கும். சட்டப்பேரவைகள் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு 100 சதவீதம் என்ற விகிதத்தில் மத்திய அரசின் நிதியுதவியாக இது அமையும்.

விதிகளில் பரிந்துரைக்கப்பட்ட புறநிலை அளவுகோல்களின் அடிப்படையில் மாநில வாரியான ஒதுக்கீடுகள் மூலம் நிதி வழங்கப்படுகிறது. இது கணிக்கக்கூடிய தன்மை, நிதியின் முறையான பயன்பாடு, சிறந்த திட்டமிடல் ஆகியவற்றை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் வேலைவாய்ப்புக்கான சட்டப்பூர்வ உரிமைகளை முழுமையாகப் பாதுகாக்கிறது.

பலப்படுத்தப்பட்ட நிர்வாகத் திறன்: நிர்வாகச் செலவின உச்சவரம்பு 6% என்பதிலிருந்து 9% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது மேம்பட்ட பணியமர்த்தல், பயிற்சி, தொழில்நுட்பத் திறன், கள அளவிலான ஆதரவு ஆகியவற்றைச் சாத்தியமாக்குகிறது. முடிவுகளை திறம்பட செயல்படுத்துவதற்கான திறனையும் இது வலுப்படுத்துகிறது.

2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இந்தியாவின் கிராமப்புற வேலைவாய்ப்பு கட்டமைப்பைப் புதுப்பித்து வலுப்படுத்துவதற்கான ஒரு தீர்க்கமான படியாக வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்க மசோதா- 2025 அமைந்துள்ளது.

ஒரு நிதியாண்டிற்கு 125 நாட்களாக சட்டப்பூர்வ ஊதியத்துடனான வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை வழங்குவதன் மூலம், இந்தச் சட்டம் வேலை கோரும் உரிமையை வலுப்படுத்துகிறது. அதே நேரத்தில் பரவலாக்கப்பட்ட, பங்கேற்பு நிர்வாகத்தை ஆழப்படுத்துகிறது. இது வெளிப்படையான, விதிகள் அடிப்படையிலான நிதி ஒதுக்கீடு, பொறுப்புணர்வு செயல்முறைகள், தொழில்நுட்பத்தால் செயல்படுத்தப்படும் உள்ளடக்கம், ஒருங்கிணைப்பால் ஏற்படும் வளர்ச்சி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்கிறது. அதன் மூலம் இத்திட்டம் வருமானப் பாதுகாப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நிலையான வாழ்வாதாரங்கள், மீட்சித்திறன் கொண்ட சொத்துக்கள், நீண்ட கால கிராமப்புற செழிப்புக்கு ஆகியவற்றுக்கும் உறுதியான பங்களிப்பை வழங்குகிறது.

வேலைவாய்ப்பு உத்தரவாதமும், உரிமை கோரலும்: இந்தச் சட்டம் வேலைவாய்ப்பைக் கோரும் உரிமையை நீர்த்துப்போகச் செய்யவில்லை. மாறாக, தகுதியுள்ள கிராமப்புறக் குடும்பங்களுக்குக் குறைந்தபட்சம் 125 நாட்களுக்கு உத்தரவாதமான, ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்க வேண்டிய தெளிவான சட்டப்பூர்வக் கடமையை அரசின் மீது விதிக்கிறது. உத்தரவாத நாட்களின் விரிவாக்கம், வலுப்படுத்தப்பட்ட பொறுப்புணர்வு, குறை தீர்க்கும் வழிமுறைகள் ஆகியவை அனைத்தும், இந்த உரிமையைச் செயல்படுத்தும் தன்மையை வலுப்படுத்துகிறது.

நெறிமுறை அடிப்படையிலான நிதி ஒதுக்கீடும் வேலைவாய்ப்பு வழங்குதலும்: நெறிமுறை அடிப்படையிலான ஒதுக்கீடுகளுக்கு மாறுவது என்பது வரவு செலவுத் திட்டம், நிதி நிலை ஆகியவற்றின் வழிமுறைகள் தொடர்பானது. இது வேலைவாய்ப்புக்கான சட்டப்பூர்வ உரிமையை பாதிக்காது. பிரிவுகள் 4(5) மற்றும் 22(4) ஆகியவை வேலைவாய்ப்பு அல்லது வேலையின்மை தொடர்பான நிதியை வழங்குவதற்கான சட்டப்பூர்வக் கடமையைத் தக்கவைத்துக்கொண்டு, விதி அடிப்படையிலான, கணிக்கக்கூடிய ஒதுக்கீடுகளை உறுதி செய்கின்றன.

அதிகாரப்பரவலாக்கமும் ஊராட்சிகளின் பங்கும்: இந்தச் சட்டம் திட்டமிடல் அல்லது செயலாக்கத்தைக் குறைக்கவில்லை. பிரிவுகள் 16 முதல் 19 வரை திட்டமிடல், செயலாக்கம், கண்காணிப்பு ஆகியவற்றுக்கான அதிகாரத்தை ஊராட்சிகள், திட்ட அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் என பொருத்தமான நிலைகளில் ஒப்படைக்கின்றன. தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்படுவதற்கும் உள்ளூர் நிலையில் முடிவெடுப்பதற்கும் தொடர்பு இல்லை. மாறாக வெளிப்படைத்தன்மை, ஒருங்கிணைப்பு, ஒருங்கிணத்தல் ஆகயவை இதன் நோக்கமாகும்.

வேலைவாய்ப்பும் சொத்து உருவாக்கமும்: இந்தச் சட்டம் 125 நாட்களுக்கான மேம்படுத்தப்பட்ட சட்டப்பூர்வ வாழ்வாதார உத்தரவாதத்தை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் அந்த வேலைவாய்ப்பு, உற்பத்தித்திறன் மிக்க, நீடித்த, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் சொத்துக்களை உருவாக்குவதற்குப் பங்களிப்பதை உறுதி செய்கிறது. வேலைவாய்ப்பு உருவாக்கம், சொத்து உருவாக்கம் ஆகிய இரண்டும் பரஸ்பரம் வலுவூட்டும் நோக்கங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது நீண்ட கால கிராமப்புற வளர்ச்சியையும் மீட்சித்திறனையும் ஆதரிக்கிறது (பிரிவு 4(2) மற்றும் அட்டவணை I).

தொழில்நுட்பமும் உள்ளடக்கமும்: இந்தச் சட்டத்தின் கீழ் தொழில்நுட்பம் ஒரு தடையாக அல்லாமல், ஒரு உதவும் வழிமுறையாகவே பார்க்கப்படுகிறது. பிரிவுகள் 23, 24 ஆகியவை பயோமெட்ரிக் அங்கீகாரம், புவிக்குறியிடுதல், நிகழ்நேர தகவல் பலகைகள் ஆகியவை மூலம் தொழில்நுட்பத்தால் ஏற்படும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கின்றன. அதே நேரத்தில் பிரிவு 20 கிராம சபைகளால் நடத்தப்படும் சமூகத் தணிக்கைகளை வலுப்படுத்தி, சமூகக் கண்காணிப்பு, வெளிப்படைத்தன்மை, உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றை உறுதி செய்கிறது.

வேலையின்மைக்கான படி (நிதி உதவி): இந்தச் சட்டம் முந்தைய தகுதியிழப்பு விதிகளை நீக்கி, வேலையின்மைக்கான நிவாரண நிதி உதவிப் படியை ஒரு அர்த்தமுள்ள சட்டப்பூர்வப் பாதுகாப்பாக மாற்றுகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் வேலை வழங்கப்படாத பட்சத்தில், பதினைந்து நாட்களுக்குப் பிறகு வேலையின்மைக்கான நிவாரண உதவிப் படி வழங்கப்படும்.

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார இயக்கச் சட்டம் -2025 நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்தியாவின் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லைக் குறிக்கிறது. சட்டப்பூர்வ வேலைவாய்ப்பை 125 நாட்களாக விரிவுபடுத்துதல், பரவலாக்கப்பட்ட, பங்கேற்பு திட்டமிடலை உட்பொதித்தல், பொறுப்புணர்வை வலுப்படுத்துதல், ஒருங்கிணைப்பு, செறிவூட்டல் அடிப்படையிலான வளர்ச்சியை நிறுவனமயமாக்குதல் ஆகியவை மூலம், இந்தச் சட்டம், கிராமப்புற வேலைவாய்ப்பை சிறப்பானதாக மாற்றுகிறது. அதிகாரமளித்தல், உள்ளடக்கிய வளர்ச்சி, வளமான, மீள்தன்மை கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குவதற்கான ஒரு உத்திசார் கருவியாக இந்தச் சட்டம் அமைந்துள்ளது. இது 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப முழுமையான சட்டமாக அமைந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT