

புது டெல்லி: டெல்லியில் உள்ள வங்கதேசத் தூதரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக அந்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்துள்ள வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "இது தவறாக வழிநடத்தும் பிரச்சாரம்" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “வங்கதேசத்தில் சிறுபான்மை இந்து சமூகத்தைச் சேர்ந்த தீபு சந்திர தாஸ் கொல்லப்பட்ட சம்பவம் கொடுமையானது.
உண்மை என்னவென்றால், டிசம்பர் 20 அன்று புது டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்தின் முன் சுமார் 20-25 இளைஞர்கள் கூடி, மைமன்சிங்கில் தீபு சந்திர தாஸ் கொடூரமாகக் கொல்லப்பட்டதைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். அதே நேரத்தில் வங்கதேசத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிசெய்ய அழைப்பு விடுத்தனர். வங்கதேச தூதருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக வரும் செய்திகள் என்பது தவறாக வழிநடத்தும் பிரச்சாரம்.
சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை சில நிமிடங்களில் அந்தக் குழுவினரைக் கலைத்தது. இந்த நிகழ்வுகளுக்கான காட்சிகள் அனைவரும் பார்க்கும் வகையில் பொதுவெளியில் கிடைக்கின்றன. வியன்னா மாநாட்டின்படி, எங்கள் நாட்டில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
எங்கள் அதிகாரிகள் வங்கதேச அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர். சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து எங்கள் கடுமையான கவலைகளை அவர்களிடம் தெரிவித்துள்ளோம். தாஸ் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்" என்று அவர் கூறினார்
முன்னதாக, வங்கதேசத்தில் பிரபல பத்திரிகையாளர் மஹ்மூதுர் ரஹ்மானால் வெளியிடப்படும் 'அமர் தேஷ்' என்ற நாளிதழில், "டெல்லியில் வங்கதேச தூதரைக் கொல்ல அச்சுறுத்தல்" என்ற தலைப்பில் வெளியான செய்தியில், அகண்ட இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த குழுவினர் வங்கதேச தூதரகத்தின் முன்பு ஆக்ரோஷமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், "அவரைச் சுட்டுக் கொல்லுங்கள்" என்று அச்சுறுத்தல் விடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தது.